'பொன்விழா நாயகன்' திருமாவளவனிடம் குவிந்த 8000 கிராம் பொற்காசுகள்!

தனது பொன்விழாவையொட்டி தனக்குப் பரிசுகளைத் தர விரும்புவோர் பொற்காசுகளாக அதைக் கொடுக்குமாறு கோரியிருந்தார் திருமாவளவன். இதையடுத்து அவருக்கு நடைபெறும் பொன் விழாக்களின்போது பொற்காசுகளை அவருக்குக் கட்சியினர் பரிசாக அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் நேற்று திருமாவளவன் பொன்விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் திருமாவளவன் பேசுகையில், இதுவரை 6 மாவட்டங்களில் நடந்த பொன்விழா நிகழ்ச்சிகள் மூலம் மொத்தம் எனக்கு 8 ஆயிரம் கிராமிற்கு மேல் தங்க பொற்காசுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த பொற்காசுகள் அனைத்தும் எனக்கோ, எனது குடும்பத்திற்கோ அல்ல. எல்லாம் நமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தான்.
இன்று அனைத்துக் கட்சிகளுக்கும் தொலைக்காட்சிகள் உள்ளன. ஆனால் நமது கட்சிக்கு தொலைக்காட்சி இல்லை. இந்த குறையை போக்குவதற்கும், நமது கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு தெரிவிப்பதற்காகவும் புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்று தொடங்கப்பட உள்ளது.
கூடங்குளம் போராட்டக்காரர்களை ஆரம்பத்தில் ஊக்குவித்த தமிழக அரசு, தற்போது அவர்களை எதிர்ப்பது ஏன் என்று தெரியவில்லை. கூடங்குளம் அணு உலையை மூடும் வரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடும். உதயகுமார் போலீசில் சரண் அடையும் அளவுக்கு அவர் எந்த குற்றமும் செய்யவில்லை.
பதவி உயர்வில் ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும். பதவி உயர்வு இட ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டோரையும் சேர்க்க வேண்டும் என்பது தான் நமது நிலைப்பாடு. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவை நிறைவேற்றி விட்டு, அதன்பின் அதில் இதர பிற்படுத்தப்பட்டோரையும் சேர்க்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications