சென்னையில் பைக் மீது லாரி மோதி கல்லூரி மாணவி பலி-வாலிபர் படுகாயம்
சென்னை: சென்னையில் உள்ள அடையாறு காந்தி மண்டபம் மேம்பாலத்தில் மோட்டர்சைக்கிள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பலியானார். அவருடன் சென்ற வாலிபர் படுகாயமடைந்து உயிர் தப்பினார்.
சென்னை அடையாறு மல்லிகைப்பூ நகரைச் சேர்ந்தவர் மீனா(18). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. படித்து வந்தார். பல்லாவரம், பாரதி நகரைச் சேர்ந்த பிரகாஷ்(24) என்பவருடன் நேற்று காலை 7 மணியளவில் மோட்டர் சைக்கிளில் சென்றார்.
அடையாறு சர்தார்படேல் சாலை, காந்தி மண்டபம் மேம்பாலத்தில் சென்ற போது, பின்னால் சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மீனாவும், பிரகாஷூம் படுகாயமடைந்தனர்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே மீனா உயிரிழந்தார். பிரகாஷ், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினியராக வேலை செய்து வரும் பிரகாஷின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அடையாறு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இந்த நிலையில் விபத்தில் சிக்கிய மீனா, பிரகாஷ் இடையிலான உறவு குறித்து பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரகாஷ், தனது காதலியான மீனாவை கடந்த 5 நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டதாக, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால் மீனாவின் பெற்றோர், இருவரும் நண்பர்களாக இருந்தனர் என்று கூறியுள்ளனர். இதனால் போலீசார், மீனாவை திருமணம் ஆகாதவர் என்று குறிப்பிட்டு, மீனாவின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications