ரூ.6 கோடி மோசடி: அல்மா ஈமு கோழி நிறுவன அதிபர்கள் கைது
ஈரோடு: ஈரோடு அருகே 6 கோடி ரூபாய் மோசடி செய்த ஈமு கோழி நிறுவன அதிபர்கள் இரண்டு பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பவானி அருகே உள்ள சித்தாறு பகுதியில் அல்மா ஈமுபார்ம்ஸ் என்ற ஈமுகோழி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதனை வெங்கடாசலம் (வயது 35), சதீஷ் (36) ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் ரூ.1 1/2 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகையும், போனசும் வழங்கப்படும் என அறிவித்ததை நம்பி ஏராளமான பொதுமக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அவர்கள் ஊக்கத்தொகை வழங்காமல் திடீரென அலுவலகத்தை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அல்மா ஈமு பார்ம்ஸ் மீது இதுவரை 177 புகார்கள் வந்துள்ளது.
போலீசார் அல்மா ஈமு பார்ம்ஸ் நிறுவன பங்குதாரர்கள் வெங்கடாசலம், சதீஷ் மற்றும் வெங்கடாசலம் மனைவி மதுமதி ஆகிய 3 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ரூ.6 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதைதொடர்ந்து தலைமறைவாக இருந்த வெங்கடாசலம்,சதீஷ் ஆகிய 2 பேரையும் இன்று ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மதுமதியை தேடி வருகிறார்கள். கைதான 2 பேரையும் கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications