கசாபை பிடித்தபோது வீரமரணமடைந்த ஏ.எஸ்.ஐ. துக்காராம் குடும்பம் மகிழ்ச்சி

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த 10 தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டல் உள்பட பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தினர். இதில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகளில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது அஜ்மல் கசாப் மற்றும் இஸ்மாயில் என்ற 2 தீவிரவாதிகள் மட்டும் ஸ்கோடா காரில் தப்பித்துப் போவதாக துணை எஸ்.ஐ. துக்காராம் ஓம்ப்லேவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவல் கிடைத்த சில நிமிடத்தில் அவரைத் தாண்டி ஒரு ஸ்கோடா கார் சென்றது. உடனே அவர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு அந்த காரை துரத்தினார். அப்போது அந்த கார் சவ்பாட்டி பகுதியில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி நின்றது. இதையடுத்து அந்த 2 தீவிரவாதிகளும் அங்கிருந்த போலீசாரை சுடத் தொடங்கினர். பதிலுக்கு போலீசார் சுட்டதில் கசாபுடன் இருந்த தீவிரவாதி இறந்தான். அப்போது அங்கு வந்த துக்காராம் அந்த காரில் பாய்ந்தார். உடனே கசாப் கண்ணாடியை இறக்கிவிட்டு தன் கையில் இருந்த துப்பாக்கியால் துக்காராமை சுட்டான். அவரது உடலை குண்டுகள் துளைத்தபோதும் எஸ்.ஐ. பாஸ்கர் காதம் கசாபை கைது செய்ய ஏதுவாக அவர் துப்பாகியின் பேரலை விடாமல் பிடித்திருந்தார்.
பின்னர் அவர் வீர மரணமடைந்தார். தீவிரவாதிகளைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரவாத எதிர்ப்பு குழு தலைவர் ஹேமந்த் கர்கரே, என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலஸ்கர் மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே ஆகியோர் தங்கள் உயிரை இழந்தனர்.
இந்த சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் கழித்து இன்று காலை 7.30 மணிக்கு கசாப் ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவன் மரணச் செய்தி அவனைப் பிடிக்க தன்னுயிரை தியாகம் செய்த துக்காராம் மற்றும் பிற போலீசார் குடும்பத்தினருக்கு ஆறுதலாக உள்ளது.












Click it and Unblock the Notifications