'புதிய பாதை'க்கு அடிபோடுகிறாரா மேட்டூர் தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்திபன்?

சமீபத்தில் தேமுதிகவின் சுந்தரராஜன், தமிழழகன், அருண் பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் ஆகிய எம்.எல்.ஏக்கள் அதிமுக அரசுக்கு ஆதரவாக திரும்பினர். இதனால் தேமுதிக வட்டாரமே கலகலத்துப் போனது.
தனது எம்.எல்.ஏக்கள் இப்படி அணி மாறியதை ஜீரணிக்க முடியாத கட்சித் தலைவர் விஜயகாந்த், இதுகுறித்து கேள்வி கேட்ட செய்தியாளர்கள் மீது முரட்டுத்தனமாக பாய்ந்தார். நாயே நாயே என்றும் திட்டித் தீர்த்தார்.
மொத்தம் 12 எம்.எல்.ஏக்களை தேமுதிகவிலிருந்து இழுக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இன்னொரு எம்.எல்.ஏ. அதிமுக அரசுக்கு ஆதரவாக மாறியுள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.
அவரது பெயர் எஸ்.ஆர். பார்த்திபன். மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். இவர் சமீபத்தில் மேட்டூரில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மேடை ஏறி அனைவரின் விழிகளையும் உயர வைத்துள்ளார்.
கடந்த 18-ம் தேதி, மேட்டூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவுக்குத் தலைமை வகித்தார். அப்போது திடீரென பார்த்திபன் அங்கு மேடை ஏறினார். அமைச்சரை நெருங்கி கும்பிட்ட அவர் அவருக்குப் பக்கத்தில் போட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். அந்த இருக்கை அவருக்காகவே போடப்பட்டிருந்ததாம்.
விழாவின்போது அமைச்சரும், பார்த்திபனும் நெருக்கமாக அமர்ந்தபடி நீண்ட நேரம் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தனர். விழாவில் பார்த்திபன் பேசும்போது விஜயகாந்த்தை வணங்கி உரையைத் தொடங்குவதாக கூறிப் பேசினார். தொகுதிப் பிரச்சினைகள் குறித்துப் பேசினார். இருப்பினும் தான் இந்த விழாவில் பங்கேற்பது குறித்து கட்சித் தலைமைக்குச் சொல்லவில்லை என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மக்கள் பிரச்னைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எங்கள் தலைவர் கேப்டன் சொல்லி இருக்கிறார். என் தொகுதி மக்களின் பிரச்னைகளைப் பேச வேண்டும் என்றுதான் நான் அரசு விழாவில் கலந்துகொண்டேன். இது ஒரு சாதாரண விஷயம். அதனால்தான் அரசு விழாவில் கலந்து கொண்டதைத் தலைமைக்குச் சொல்லவில்லை என்றார்.
இருந்தாலும் பார்த்திபன் 'புதிய பாதை'க்கு அடி போட ஆரம்பித்து விட்டதாகவே மேட்டூர் பக்கம் பேசிக் கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications