விஜயகாந்த் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறிய பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஜெயந்தி என்பவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் கடந்த சட்டசபை தேர்தலின்போது ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே விஜயகாந்த் தரப்பில் இருந்து தனக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால் போலீஸ் பாதுகாப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பால் வசந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி வரை ஜெயந்திக்கு பாதுகாப்பு வழங்குமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார். மேலும் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications