பெண் மேயரைக் கடத்தி, அடித்து, கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற போதைக் கும்பல்!

அந்த மேயரின் பெயர் மரியா சான்டோஸ் கோரஸ்டீட்டா. மொரிலா நகர மேயராவார் இவர். இவர் மிகவும் கண்டிப்பான மேயராக இருந்துள்ளார். குறிப்பாக போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தார். இதனால் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மரியாவைக் குறி வைத்து இயங்க ஆரம்பித்தனர். 2 முறை அவரை படுகொலை செய்ய முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் காலை 8 மணிக்கு தனது மகளை பள்ளியில் கொண்டு விடக் கிளம்பினார். அப்போது திடீரென போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மேயர் காரை வழிமறித்து மடக்கினர்.
36 வயதான மரியாவை காரிலிருந்து தரதரவென இழுத்தனர். சரமாரியாக அவரை அடித்தனர். அப்போது சாலையில் போய்க் கொண்டிருந்தவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து நின்று விட்டனர். ஆனால் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. காரணம், கடத்தல் கும்பலிடம் இருந்த பயங்கர ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள்.
அப்போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மேயரின் மகளையும் கடத்த முயன்றனர். ஆனால் அவர்களிடம் அதை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார் மரியா. தனது மகளை விட்டு விடுமாறும் தன்னை அழைத்துச் செல்லுமாறும் அவர் கெஞ்சினார். இதனால் கடத்தல் கும்பல் மகளை விட்டு விட்டது. பின்னர் கடத்தல் கும்பலின் காரில் மரியாவே தானாகச் சென்று ஏறினார்.
தனது கண் முன்பாகவே தனது தாயாரை கடத்திச் சென்றதைப் பார்த்து மரியாவின் மகள் அழுதபடி தவித்த காட்சி பரிதாபத்துக்குரியது.
கடத்திச் செல்லப்பட்ட மரியாவின் நிலை என்னவென்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் ஒரு வாரம் கழித்த நிலையில் தற்போது மரியாவின் உயிரற்ற உடல் கிடைத்துள்ளது. அவரது உடல் முழுவதும் கத்திக் குத்துக் காயங்கள் உள்ளன. சரமாரியாக அடித்துள்ளனர். உடலை தீவைத்தும் எரித்துள்ளனர். பாதி எரிந்த நிலையில் அவரது உடல் சான்ஜூவான் டெரரமியோ என்ற இடத்தில் சாலையோரமாக கிடந்தது.
மரியா படுகொலை மெக்சிகோவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரை இந்த நூற்றாண்டின் கதாநாயகி என்று மெக்சிகோ மக்கள் வர்ணித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications