மின் வெட்டு அதிகரிக்கும்: ஹைகோர்ட்டில் மின்சார வாரியம் தகவல்

தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை மின்வெட்டுதான். 18 மணிநேரம் வரை மின்சாரம் தடைபடுகிறது. இதனையடுத்து 'குடிமக்களுக்கான பாதுகாப்பு'எனும் அமைப்பு, மின்வெட்டு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் மின் தேவை 12ஆயிரத்து500 மெகாவாட். தமிழகத்தில் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கையிருப்பில் உள்ளது.
சென்னையில் காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள் 2 மணி நேரமும், மற்ற இடங்களில் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள் 3 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மின்தொகுப்பில் மின்சாரம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக மின்தடை செய்ய வேண்டியது உள்ளது. அப்படி சீர்குலைந்தால் மாநிலம் முழுவதுமே பாதிப்பு ஏற்படும்.
தமிழகத்தில் நீர் மின்நிலையம் மூலமாக கிடைக்கும் மின்சாரம் 2ஆயிரத்து224 மெகாவாட் ஆகும். ஆனால் மழை பெய்யாத காரணத்தினால் 48% குறைவாகத்தான் இந்த ஆண்டு மின் உற்பத்தியாகி இருக்கிறது.
மாவட்ட ரீதியாக நாங்கள் மின்வெட்டை அமல்படுத்துவதில்லை. 10 தொகுப்பாக பிரித்து (6 நகர்ப்புறம், 4 கிராமப்புறம்) மின்வெட்டை அமல்படுத்துகிறோம். எனவே மாவட்ட வாரியாக மின்வெட்டில் வேறுபாடு இருக்காது. சென்னையில் மிகமுக்கிய அலுவலகங்கள் இருப்பதால் 2 மணிநேரம் மட்டும் மின்தடை செய்கிறோம். கர்நாடகாவில் பெங்களூரில் மின்வெட்டு இல்லை. ஆனால் மற்ற பகுதிகளில் மின்வெட்டு உள்ளது.
தமிழகத்தில் தற்போது 8 முதல் 12 மணி நேரம் சுழற்சி முறையில் மின்சாரத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. மின் தேவை அதிகரித்தாலோ, திடீர் செயலிழப்பு ஏற்பட்டாலோ கூடுதல் மின்வெட்டை தவிர்க்க முடியாது. அப்போது மின்வெட்டு நேரத்தையும் முன்கூட்டியே நுகர்வோருக்கு தெரிவிக்க முடியாது.
வடசென்னை அனல் மின்நிலையத்தையும், வள்ளூர் அனல் மின்நிலையத்தையும் இணைக்க இருக்கிறோம். நெய்வேலியில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications