புதுச்சேரியில் மறுவரையறை செய்துவிட்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்துங்கள்: சென்னை ஹைகோர்ட்
புதுச்சேரி: ஜனவரி மாதம் நடைபெறுவதாக இருந்த புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 2006க்குப் பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. இதனால் பல்வேறு நலப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வரும் ஜனவரி மாதம் 15ம் தேதிக்குள் புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவையடுத்து ஜனவரி 4, 8, 10 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த அறிவிப்பை எதிர்த்து புதுச்சேரி முன்னாள் கவுன்சிலர் அனந்தலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
1991ம் ஆண்டு புதுச்சேரியில் மறுவரையறை செய்யப்பட்டதன்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரையறை செய்தபடி தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என பலருக்கும் வாய்ப்புகள் பறிபோகும் நிலை ஏற்படும். எனவே தொகுதி மறுவரையறை செய்த பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள் இன்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
இன்றைய தேதியில் இருந்து 2 மாதத்துக்குள் புதுச்சேரி தொகுதியை வரையறை செய்துவிட வேண்டும். அதில் இருந்த அடுத்த 3 மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications