முதல்வர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்பதே இல்லை: பிரதமருக்கு ஜெ. கடிதம்

அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது: மத்திய அரசு மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பதாக எனக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. கடந்த மே மாதம் உங்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் நான் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு கருத்து தெரிவித்ததை நினைவில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
எல்லா தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒரு வரி பரிந்துரைக்கு எல்லா முதல்வர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஒருங்கிணைப்பு பணி செய்வதே சரியானதாகும். தீவிரவாத தடுப்பில் தற்போதைய தகவல் பரிமாற்ற மையங்கள் சிறப்பாக செயலாற்றி வருகின்றன.
மேலும் தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை சேர்ந்தவர்கள் மாநிலங்களில் தன்னிச்சையாக செயல்பட்டு கைது போன்ற நடவடிக்கைகளுக்கு திட்டமிடுவது மாநில உரிமையை பறிப்பதாக உள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களே இதை ஏற்க மறுத்துள்ளனர். இந்தப் பரிந்துரை உள்துறை அமைச்சகத்தின் தவறான வழிகாட்டுதலின் பேரில் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தில் நடக்கும் விவகாரங்கள் பற்றி அந்தந்த மாநில முதல்வர்களுக்குத்தான் தெரியும். அவர்கள்தான் உறுதியான நடவடிக்கை எடுப்பார்கள். ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்பது மாநில முதல்வர்களுக்கே தெரியும். எனவே மத்திய அரசு அமைக்க திட்டமிட்டுள்ள தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஒப்புதல் கொடுக்கும் ஒரு அமைப்பாகவே இருக்க வேண்டும். இந்த அமைப்பு மாநில அரசுகளின் உளவுத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
இதைத்தான் மாநில முதல்வர்கள் விரும்புகிறார்கள். தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மாநில போலீஸ் வசம் மத்திய அரசு விட்டு விடுவதே நல்லது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் அதிவிரைவு தீவிரவாத தடுப்பு அதிரடிப் படை உருவாக்கப்பட வேண்டும். இந்த படைக்காக மத்திய அரசு தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்தல் வேண்டும். அப்படியானால்தான் அதிரடி படைகளுக்கு தேவையான அதிநவீன கருவிகளை வாங்க முடியும். இந்த கருத்துக்களை ஏற்கனவே நான் கடந்த கூட்டத்தில் தெரிவித்தேன்.
இந்த கடிதம் மூலம் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதை நான் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். கடந்த கூட்டத்தில் நான் வலியுறுத்திய மற்றொரு கருத்து பற்றியும் நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதாவது தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு முன்பு எல்லா மாநில முதல்வர்களையும் அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தேன். ஆனால் மத்திய அரசு இதை காற்றில் பறக்க விட்டு விட்டது போல தெரிகிறது.
எனவே இந்த விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் முன்பு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்பட வேண்டும். தற்போது மாநில முதல்வர்களின் கருத்துக்கள் காது கொடுத்து கேட்கப்படுவதில்லை. அந்த அளவுக்கு நிலமை மோசமாகி விட்டது. நேற்று டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டதே இதற்கு உதாரணமாகும்.
எனது கருத்தை முழுமையாக சொல்ல விடாமல் குரல் வளையை நெரிக்கும் வகையில் கால அவகாச கட்டுப்பாடு விதித்ததால் நான் என் பேச்சை பாதியில் முடித்தேன். எனவே எதிர்காலத்தில் மாநில முதல்வர்களை டெல்லியில் நடக்கும் மாநாடுகளுக்கு அழைக்கும் போது மிகவும் கண்ணியத்துடன் நடத்த அமைச்சகங்களுக்கு அறிவுறுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய தீவிரவாத மையத்துக்கு முதல்வர்கள் எதிர்ப்பாக உள்ளோம் என்பதை மீண்டும் ஒரு தடவை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். மேலும் தேசிய அளவில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் போது அது தொடர்பான வரைவு அறிக்கையை மாநில முதல்வர்களுக்கு தர வேண்டும். மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஆதரவு:
இந் நிலையில் பத்திரிகை கவுன்சில் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் குறித்தும், அதில் முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது குறித்தும் பேசினார்.
அப்போகு ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர் கருத்துத் தெரிவித்தார். அவர் கூறுகையில், ஒரு மாநில முதல்வருக்கு மாநிலத்தைப் பற்றிய கருத்துகளைத் தெரிவிப்பதற்கு 10 நிமிட நேரம் போதுமானதாக இருக்காது. எனவே, இனிவரும் காலங்களிலாவது குறைந்தபட்சம், 15 நிமிட நேரம் கொடுத்து பேசச் செய்ய வேண்டும். மேலும், முதல்வர்கள் தெரிவிக்கும் கருத்துகள் நீண்ட நேரம் ஆகும் சூழ்நிலையில், அவர்கள் தங்கள் கருத்துகளை எழுத்துப் பூர்வமாக தெரிவிக்குமாறும், அவற்றின் முக்கிய அம்சங்களை மட்டும் சுருக்கமாக முன்கூட்டியே தெரிவிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications