கொடுமையான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை! – மத்திய அமைச்சரவை முடிவு!
டெல்லி: கும்பலாக பலாத்காரத்தில் ஈடுபடுவோர் சாகும்வரை சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும். கொடுமையான பாலியல் குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
டில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்த அதிர்ச்சி சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தண்டனையை கடுமையாக்குவது துரிதமாக வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பளிப்பது பற்றி பரிந்துரைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இதில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.வர்மா தலைமையில் இமாச்சல் பிரதேச ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, லீலா சேத், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல், கோபால் சுப்ரமணியம் ஆகிய மூன்று பேர் உள்ளனர்.
வர்மா குழுவின் அறிக்கை
பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த குழு ஆய்வு செய்து 200 பக்கங்களை உடைய அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் பரிந்துரையாக கடந்த, 23ம் தேதி அளித்தது. இதில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வழங்குவது உட்பட பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டு இருந்தன.
மத்திய அமைச்சரவை முடிவு
இந்த நிலையில், வர்மா குழுவின் அறிக்கையை பரிசீலிக்க மத்திய அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் டெல்லியில் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. கூட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
கும்பல் பலாத்காரம்
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்து அந்த பெண்ணுக்கு கடுமையான காயம் ஏற்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்க அவசர சட்டம் வழி செய்கிறது. இப்படி ஆயுள் தண்டனை பெறுபவர்கள் சாகும்வரை சிறையிலேயே இருக்கவேண்டும். முன்கூட்டியே விடுதலை ஆக முடியாது.
பாலியல் வன்முறைக் குற்றம்
இந்த அவசர சட்டத்தில், பாலியல் பலாத்கார குற்றம் என்பதற்கு பதிலாக பாலியல் வன்முறை குற்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொடுமையான பாலியல் குற்றங்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படும்.
ஆசிட் வீச்சுக்கு கடுமையான தண்டனை
இது தவிர பெண்கள் மீதான ஆசிட் வீச்சுக்கும் அவசர சட்டத்தில் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆசிட் வீசுபவருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கலாம்.
சில்மிஷம் செய்தால் சிறை
பெண்களை மானபங்கப்படுத்துவோருக்கு தற்போது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இது இனி 5 ஆண்டாக அதிகரிக்கப்படும். பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். இப்போது, இந்த குற்றத்துக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
அவசர சட்டம் வெளியிட முடிவு
இந்த அவசர சட்டம், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டதும் அமலுக்கு வரும். வரும் 21ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே அவசர சட்டம் வெளியிட அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications