சிம் வாங்க வந்தவர் பெண்ணின் இடுப்பைக் கிள்ளினார் - மக்கள் பிடித்துக் கொடுத்தவரை ரிலீ்ஸ் செய்த போலீஸ்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி என்ற ஊரில் செல்போன் கடைக்கு சிம் வாங்க வந்த நபர், அக்கடையில் வேலை பார்த்த பெண்ணைக் கிண்டல் செய்து இடுப்பையும் பிடித்துக் கிள்ளினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்தநபரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் போலீஸார் அவரை விட்டு விட்டதால் மறியல் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீஸார் த்டியடி நடத்திக் கலைத்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள ஒரு செல்போன் கடையில்ஒரு பெண் வேலை பார்த்து வருகிறார். மார்ச் 3ம் தேதி இரவு கடைக்கு மாதலிங்கம் என்ற வாலிபர் குடிபோதையில் சென்றார். அவர் சிம்கார்டு மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் வேண்டும் என்று கேட்டார்.
அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணை கேலி- கிண்டல் செய்து உள்ளார் என்றும், அந்த பெண்ணின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்ததாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சல் போட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அந்த இளைஞரை பிடித்து அடித்து பாப்பாரப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பற்றி தெரியவந்ததும் போலீஸ் நிலையம் முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு விட்டனர்.
போலீசார் அந்த வாலிபர் குடிபோதையில் இருப்பதாகவும், எனவே காலையில் விசாரித்து கொள்ளலாம் என்று கூறி அவரை அனுப்பி விட்டனர். ஆனால் அந்த வாலிபர் ஊரில் இருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதையடுத்து பெண்ணின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் சாலை மறியலும் செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
உடனடியாக பென்னாகரம் டி.எஸ்.பி. நடராஜன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் மறியல் செய்த பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை. இதையடுத்து போலீசார் மறியல் செய்த பொதுமக்கள் மீது லேசான தடியடி நடத்தினர். இதனால் மறியலில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.












Click it and Unblock the Notifications