தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யலாம்... புதுக்கோட்டையில் கன மழை-பள்ளிகளுக்கு விடுமுறை

சில நாட்களுக்கு முன்பு இலங்கையின் தென் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. அது தற்போது தென்மேற்கு வங்கக்கடல் வரை பரவியுள்ளது. தமிழகத்துக்கு அருகில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால் செவ்வாய்க்கிழமை மாநிலத்தின் பல இடங்களில் மழை பெய்தது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே மழை பெய்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, திருச்சி மாவட்டம் மணப்பாறை, லால்குடி, வையம்பட்டி, துறையூர், முசிறி, புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது. மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத் தகவல்கள் கூறுகையில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அடுத்த சில நாள்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை - பள்ளிகளுக்கு விடுமுறை
கன மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், +2 தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என்றும் பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications