தற்கொலை செய்து கொண்ட 11 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ரூ 1 லட்சம் நிதி - கவிஞர் வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது சமீபத்திய படைப்பான மூன்றாம் உலகப் போர் புத்தகத்தின் மூலம் கிடைத்த வருவாயிலிருந்து, காவிரி டெல்டா பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 11 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ரூ 1 லட்சம் நிதியுதவி அளிக்கிறார் கவிஞர் வைரமுத்து.

விகடனில் வைரமுத்து தொடராய் எழுதி, பெரும் பாராட்டுக்களைப் பெற்ற மூன்றாம் உலகப் போர், நாவலாக வெளியாகி, இலக்கியச் சிந்தனை விருதினைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது:

மூன்றாம் உலகப் போர் என்ற என் படைப்பு 'இலக்கிய சிந்தனை' விருது பெறுவது மகிழ்வு தருகிறது. ஒரு நல்ல விருது என்பதை எல்லாப் படைப்புகளுக்கும் வழங்கிவிட முடியாது. அதைப் போலவே ஒரு நல்ல படைப்பாளி என்பவனால் எல்லா விருதுகளையும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அமைப்பின் பெருமை கருதி இந்த விருதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இலக்கியச் சிந்தனை சமரசமற்ற அமைப்பு என்பது போலவே எனது படைப்பும் சமரசமற்றது. மூன்று வருட ஆராய்ச்சிக்குப் பிறகு பத்து மாதங்களில் படைக்கப்பட்டது.

என் முன்னுரையில் நான் சொல்லியிருப்பதுபோல, "இந்தப் படைப்பில் புண்ணில் ஒழுகும் ரத்தமும் கண்ணில் வழியும் கண்ணீரும் இரவல் உணர்ச்சியல்ல- பெரிதும் என்னுணர்ச்சி. அந்தக் கல்லும் முள்ளும் கரடும் குன்றும்- செடியும் கொடியும் மரமும் நதியும் - மகிழ்வும் துயரும் உயர்வும் இழிவும்- ஜனனம் மரணம் சம்பவம் பலவும் நான் உற்ற உணர்வு; பெற்ற வாழ்வு; கற்ற கல்வி; பட்ட காயம்".

ஒரு விவசாயக் குடிமகன் தன் தந்தையின் தற்கொலையைப் பார்ப்பதில் இந்த நாவல் தொடங்குகிறது. அவனே இந்த மண்ணைக் காப்பதற்காகத் தன் மகனைக் கொலை செய்வதில் முடிகிறது.

இந்தியா விவசாய நாடுதான். ஆனால் இது இன்று விவசாயிகளுக்கான நாடு அல்ல. இன்று விவசாயம் என்பது கல்வி கற்காத மனிதனின் கடைநிலைத் தொழில் என்று ஆகிவிட்டது. விலங்குகளைப் போல உழைக்கிறவனும் தன் விலங்குகளுக்கும் சேர்த்து உழைக்கிறவனும் விவசாயிதான். ஆனால் விலங்குகளுக்கு இருக்கும் உத்தரவாதம் விவசாயிக்கு இல்லை. ஏனென்றால் விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதில்லை.

மராட்டியத்தில் விதர்பாவிலும் கர்நாடகத்தில் மாண்டியாவிலும், ஆந்திரத்தில் அனந்தப்பூரிலும், தமிழ்நாட்டில் தஞ்சைத் தரணியிலும் தற்கொலையால் விவசாயிகள் கொத்துக் கொத்தாய்ச் செத்து விழுவது எதிர்கால இந்தியாவுக்கு நல்ல சகுனங்கள் அல்ல.

இந்த அவலங்களையெல்லாம் ஆராய்ந்து விஞ்ஞானபூர்வமாக அழுதிருக்கிறது இந்த நாவல். சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், உலகமயமாதல், புவிச்சூடு, கிராமங்களில் மாறிவரும் விவசாய வாழ்வின் விழுமியங்கள் என்பவை பற்றியெல்லாம் பாத்திரங்களை ஊடறுத்துப் பதிவு செய்கிறது இப்படைப்பு.

நாவல் என்ற கலை வடிவமும் படித்தல் என்ற யோகமும் அருகிவரும் இக்காலச் சூழலில் இந்நாவல் தனக்கென்று ஒரு வாசகப் பெரும் பரப்பை உண்டாக்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

ஆனால் இதை முன்னெடுத்து விவாதிக்க வேண்டிய சட்டமன்றங்களும் நாடாளுமன்றங்களும் மவுனம் காப்பது எனக்குச் சலிப்பே தருகிறது. அந்தப் பாலைவன தாகத்தின் மீது விழுந்த ஒற்றை மழைத்துளியாய் இலக்கியச் சிந்தனை விருது இந்தப் படைப்பின் மீது விழுந்திருக்கிறது.

எனக்கு வாய்ப்புத் தருவோர் கலைத் துறையினர். வளர்த்து வருவோர் ஊடகத்துறையினர். இரு துறையார்க்கும் என் இதய நன்றி. மூன்றாம் உலகப் போர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது; விரைவில் வெவ்வெறு கண்டங்களில் வெளியிடப்படும்.

ஏப்ரல் 12 ஆம் நாள் இலக்கியச் சிந்தனை விருது வழங்கப்படும் மேடையில் ஒரு படைப்பாளியாய் - ஓர் எளிய சமூகக் கடமையை ஆற்றவிருக்கிறேன்.

விவசாயிகள் குடும்பத்துக்கு நிதி

பயிர் கருகியது கண்டு உயிர் மாய்த்துக் கொண்ட காவிரி டெல்டா விவசாயிகளின் குடும்பங்களுக்கு மூன்றாம் உலகப் போர் எழுதி ஈட்டிய ஊதியத்தின் பெரும் பகுதியைப் பகிர்ந்து அளிக்கவிருக்கிறேன்.

ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம் வீதம் 11 குடும்பங்களுக்கு 11 லட்சம் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்கொலைக்கு ஆளான விவசாயக் குடும்பங்களுக்குப் பல தளங்களில் பல உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. எழுத்துலகத்தின் கடமையாக என்பங்கையும் இணைத்துக் கொள்கிறேன்."
.
-இவ்வாறு அவர் கூறினார்.

இலக்கியச் சிந்தனை அமைப்பு நீண்ட காலமாக இயங்கி வரும் முக்கிய அமைப்பு. இதில் நிதியமைச்சர் ப சிதம்பரம், ப லட்சுமணன், தொழிலதிபர் பாரதி ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர். ப சிதம்பரம் ஆயுள்கால அறங்காவலர்.

இதுவரை ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், சுஜாதா, ராஜம்கிருஷ்ணன், கு சின்னப்ப பாரதி, பாலகுமாரன், வண்ணநிலவன் உள்ளிட்ட படைப்பாளிகள் இலக்கியச் சிந்தனை விருது பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+