அறுபத்து மூவர் திருவிழா... களை கட்டிய மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 17ம் தேதி கோலவிழியம்மனுக்கு அபிஷேகத்துடன் தொடங்கியது. 18ம் தேதி கொடியேற்றமும், 19ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 20ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், நடைபெற்றது.
விழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
திருத்தேரோட்டத்தை முன்னிட்டு மயிலாப்பூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கோயில் மற்றும் கோயில் திருக்குள தடத்தில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பங்குனிப் பெருவிழாவின் எட்டாம் நாளான திங்கட்கிழமை காலையில் வரலாற்று சிறப்பு மிக்க பூம்பாவை உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிச்சப்பரத்தில் ஏறிவந்த கபாலீஸ்வரர் 63 நாயன்மார்களுக்கு காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து கபாலீஸ்வரர் வெள்ளித் தேரில் முன்செல்ல 63 நாயன்மார்களும் இறைவனை பின் தொடர்ந்தனர்.
மயிலாப்பூர் நகரில் உள்ள முக்கிய ஆலயங்களில் உள்ள உற்சவ மூர்த்திகளும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். நான்கு மாட வீதிகளும், தெப்பக்குளம் சாலையிலும் வலம் வந்த 63 நாயன்மார்களைக் காண சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் வந்திருந்தனர்.
63 திருவிழாவை ஒட்டி திங்கட்கிழமை காலை முதலே மாட வீதிகளில் பக்தர்கள் குவிந்தனர். பாதுகாப்பு கருதி கோயிலின் அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பங்குனி உத்திர தினமான இன்று நள்ளிரவு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications