எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்- கடலூர் இளையராஜா கைது

சமீபத்தில் தமிழர் விடுதலைப் படை என்ற பெயரில் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில், குருவாயூர், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்களை தீவைத்து எரிப்போம், என்ஜினை பாதி வழியில் கழற்றி விடுவோம் என்று கூறி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் எழும்பூர் ரயில் நிலையம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து மேலும் 2 முறை இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் அதே நபர்.
இதையடுத்து எழும்பூர் ரயில்நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மோப்ப நாய்கள் சகிதம் நேற்று இரவு விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
மறுபக்கம் தொலைபேசி அழைப்புகள் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் இளையராஜா என்பவர் சிக்கினார். அவர் கடலூரைச் சேர்ந்தவர். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வருகிறார். மது போதையில் இவ்வாறு தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் அவரை கைது செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்து நான்கு சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. அதில் மூன்று சிம் கார்டுகளிலிருந்துதான் அவர் மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications