பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சென்னைதான் முதலிடம் வகிக்கிறது: மு.க. ஸ்டாலின்

சென்னை திருவான்மியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு 1969ல் தலைவர் கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, காவல் துறைக்கும் பொறுப் பேற்கக்கூடிய அந்த வாய்ப்பை தலைவர் கலைஞர் பெற்று ஆட்சி நடத்தியபோதுதான் இந்தியாவிலேயே முதன் முதலாக காவல்துறையினரின் நலனுக்காக ஒரு கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. ஆர்.ஏ.கோபாலசாமி அய்யங்கார் ஐ.சி.எஸ். தலைமையில் முதல் காவல் ஆணையம் உருவானது. அந்த ஆணையம் சார்பில் 133 பரிந்துரைகள் வழங்கப்பட்டு 115 பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அதன் பிறகு 1989ல் கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்று ‘‘இரண்டாவது காவல் ஆணையம்'' சபாநாயகம் ஐ.ஏ.எஸ். தலைமையில் அமைந்தது. அப்போது 112 பரிந்துரைகள் வழங்கப்பட்டு அதில் 87 பரிந்துரைகள் நிறைவேற்றித் தரப்பட்டிருக்கின்றன.
மீண்டும் 2006ல் தலைவர் கலைஞர் ஆட்சியில் பூர்ணலிங்கம் ஐ.ஏ.எஸ். தலைமையில் மூன்றாவது காவல் ஆணையம் அமைந்து அந்த ஆணையம் வழங்கிய 444 பரிந்துரைகளில் 278 பரிந்துரைகள் அன்றைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இதை நான் ஆதாரத்தோடு சொல்கிறேன். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சொல்லவில்லை.
இதைப் பற்றி மறைந்த காவல்துறை முன்னாள் ஐ.ஜி. அருள், தான் எழுதிய ‘‘போலீஸ்காரர் டைரி'' என்ற புத்தகத்திலேயே, ‘‘கலைஞர் அரசில் காவல்துறை ஆணையம் அமைத்த காரணத்தினால் தான் காவல்துறைக்கு இவ்வளவு சலுகைகளும், இவ்வளவு திட்டங்களும் வந்து சேர்ந்திருக்கின்றன'' என்று குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
நேற்றைய தினம் சட்டசபையில் ஜெயலலிதா, காவல்துறைக்கென அறிவிப்புகளை எல்லாம் வெளியிட்டிருக்கிறார். சில அறிவிப்புகள் ஏற்கனவே அறிவித்த அறிவிப்புகள்தான்.
தமிழகத்தின் தலை நகரமான சென்னை, குற்ற வழக்குகள் பதிவில் முதல் நகரமாக விளங்குகிறது. இதை மாநில குற்றத் தகவல் ஆணையப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்டு 2011 முதல் ஆகஸ்டு 2012 வரையிலான குற்றங்கள், புள்ளி விவரங்கள் மாநில குற்றத் தகவல் ஆணையத்தின் இணைய தளத்திலே தெளிவாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலே, தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 949 குற்ற வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் சென்னையில் மட்டும், 13 ஆயிரத்து 573 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.
தமிழகம் முழுவதும் சொத்துத் தொடர்பாக 12 ஆயிரத்து 662 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிலே சென்னையில் மட்டுமே 2062 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.
வன்முறை குற்றவழக்குகள் தமிழகத்தில் 20,777 பதிவாகியிருக்கின்றன. அதிலே சென்னையிலே மட்டும் 1359 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான குற்றங்களில் சென்னைதான் முதலிடமாம்.
பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது தான் மாமல்லபுரம். ஏகாம்பரேசுவரர், கைலாசநாதர், வரதராச பெருமாள், வைகுண்ட பெருமாள், விஜயராகவப் பெருமாள், சுப்பிரமணிய சாமி கோவில்கள் மற்றும் ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பெருமைக்குரிய மாவட்டம், காஞ்சீபுரம் மாவட்டம். அந்தக் காஞ்சீபுரம் மாவட்டம், இன்றைக்கு கொலையாளிகளின் புகலிடமாக மாறிக் கொண்டிருக்கிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 63 கொலைகள் நடைபெற்றிருக்கின்றன என்றார்.
முன்னதாக காஞ்சிபுரம் நகர திமுக செயலாளர் சேகர் இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் பேசுகையில்,
1967ம் ஆண்டுக்கு முன்பு சீர்திருத்த திருமணங்களை கேளி, கிண்டலாக பார்த்தனர். அந்த திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் 1967ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அறிஞர் அண்ணா சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவை பொறுத்த மட்டில் யார் வேண்டுமானாலும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக முடியும். ஆனால் கட்சியின் கிளைச் செயலாளர் பதவிக்கு வருவது எளிதன்று. ஜனநாயக முறைப்படி திமுகவில் பதவிகளை வகிக்கலாம். ஆனால் அதிமுகவில் அந்த ஜனநாயகமே இல்லை.
திமுகவினர் ஒருபோதும் தோல்விகளைக் கண்டு துவண்டு போவதில்லை. 1967ம் ஆண்டில் திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது. அறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து கருணாநிதி 1976ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தார். 1976ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எமர்ஜென்சி நிலையைக் கொண்டு வந்தார். திமுக இதை ஆதரிக்காவிட்டாலும் எதிர்க்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் எமர்ஜென்சி நிலையை எதிர்ப்பது என்றும், மிசா சட்டத்தில் கைதான தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றினார். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே திமுக ஆட்சி கவிழ்த்தப்பட்டது.
அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்து 1989ம் ஆண்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பின்னர் 1991, 2001 மற்றும் 2011ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்தது. 2006ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் நிறைவேற்ற முடியாத பல சாதனைகளை செய்தார். இருப்பினும் 2011ம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை.
வெறும் 2 மணிநேரம் மின்தடை செய்ததற்கே மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டினர். ஆனால் தற்போதோ 18 மணிநேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. அடுத்த தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications