ரூ.361க்கு மினி சமையல் சிலிண்டர்: பெட்ரோல் பங்குகளிலும் கிடைக்கும்!
டெல்லி: கூடிய விரைவில், அரசு நடத்தும் பெட்ரோல் பங்குகளில் சில்லறை விலையில் 5கி சமையல் வாயு சிலிண்டர்களைப் பெறும் திட்டத்தை அமல் படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது மத்திய அரசு.
சிலிண்டர் காலியானால், சிலிண்டர் கம்பெனிக்கு போன் செய்து எப்போ சிலிண்டர் வரும் எனக் கேட்டு இனிக் காத்திருக்க வேண்டியதில்லை. உடனடியாக, அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று சில்லறை விலையில் சின்ன சிலிண்டர் வாங்கும் காலம் வரப் போகிறது.
இது குறித்து முக்கிய திட்டம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சர் எம்.வீரப்பமௌலி.
5கி சிலிண்டர்...
மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சர் எம்.வீரப்பமௌலி 5கிலோ அளவுள்ள சிலிண்டர்களை கமர்சியல் ரேட்டில் விற்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி நேற்று கையெழுத்திட்டுள்ளார். அதன் சந்தை விலை ரூ 361 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னோட்ட சோதனை...
இது முதல்கட்டமாக ஹைதராபாத், பெங்களூர் போன்ற நகரங்களில் அமல் படுத்தப்பட உள்ளது. பின்னர் படிப்படியாக பிற நகரங்களுக்கும் விரிவு படுத்தப் படும்.
மானிய சிலிண்டர்...
தற்போது மானிய விலை சிலிண்டர் ஒன்று ரூ 400க்கு விற்கப்படுகிறது. 9 மானிய விலை சிலிண்டர்களுக்குப் பிறகு பெறப்படும் சிலிண்டர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 832 தர வேண்டி இருக்கிறது. வியாபாரத்திற்கு பயன் படும் சிலிண்டரோ ரூ 1375க்கு 19கி என்ற கணக்கில் வழங்கப்படுகிறது.
அதிக பயன்...
இத்தகைய 5கி சிலிண்டர் விற்பனைக்கு வந்தால், தனியாக தங்கி பயிலும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் சிறு குடும்பத்தினர் பயன் பெறுவர்.
முறைகேடான வழியில்...
மேலும், இதன் மூலம் சிலர் வீட்டு சிலிண்டர்களில் இருந்து முறைகேடான வழிகளில் சிறு அளவு சிலிண்டர்களை நிரப்பி தருவது தவிர்க்கப்படும்.
குடும்ப விழாக்கள்...
குடும்ப விழாக்கள் போன்றவற்றிற்க்காக பொதுமக்கள் தனியாக சிலிண்டர் பதிவு செய்து காத்திருக்க வேண்டிய அவசியமும் இனி இராது.












Click it and Unblock the Notifications