உலகத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தக் கூடிய ஒரே தலைவர் கருணாநிதிதான்- குஷ்பு
தஞ்சாவூர்: ஈழத் தமிழர்களுக்காக மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தக் கூடிய ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு குஷ்பு தலைமை தாங்கினார். பின்னர் ஒரு குட்டி மேடையில் நின்றபடி குஷ்பு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் குடிபெயர்ந்து வாழும் ஈழ தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் திமுக தலைவர் கருணாநிதிதான். அவரது முயற்சியால் தான் ஐ.நா.சபையில் ஈழதமிழர்களுக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை தோன்றியது தமிழர்களால் தான். கப்பலில் சென்று முதல் முதலில் குடி அமர்ந்தவர்கள் தமிழர்கள் தான். ஆனால் அங்கு தமிழர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. 2-ம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்.
ஈழத் தமிழர்களுக்காக 2 தடவை ஆட்சியை இழந்திருக்கிறோம். ஈழத் தமிழர்கள் மட்டும் அல்ல உலக தமிழர்களுக்காக போராட்டம் நடத்தக் கூடிய ஒரே தலைவர் கருணாநிதிதான்.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களர்கள் பிடித்து சித்ரவதை செய்கிறார்கள். அந்த மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஒவ்வொரு ஈழத் தமிழர்களுக்கும் உரிமைகள் கிடைக்கும் வரை கடைசி மூச்சுவரை போராடும் தலைவர் கருணாநிதி வழியில் எங்கள் போராட்டம் தொடரும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications