இலங்கையில், பேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட மந்திரவாதி: மூச்சுத் திணறி பலியான பரிதாபம்
கொழும்பு: இலங்கையில் பேயை விரட்ட பூஜை செய்வதாகக் கூறி, மண்ணுக்குள் புதைக்கப் பட்ட மந்திரவாதி மூச்சுத் திணறி பரிதாபமாக பலியானார்.
இலங்கையில், கொழும்பு அருகே உள்ள பிலான்வாட் கிராமத்தை சேர்ந்த வசந்தா பண்மாரா என்ற ஆசிரியை. இவர் தனது வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக அஞ்சினார். அதனைத் தொடர்ந்து மந்திரவாதியான மாஸி காஸ்ட்ரோ என்பவரை சந்தித்தார் வசந்தா.
வசந்தாவின் வீட்டிற்கு வந்த மாஸி, பூனை ஒன்றைக் கொன்று அதன் ரத்தத்தை வைத்து முதலில் பூஜை ஒன்றை செய்துள்ளார். பின்னர், ஒரு குழி தோண்டி அதில் அமர்ந்து கொண்ட காஸி, தான் பேயை விரட்ட உள்ளே பூஜை செய்யப் போவதாகவும், தன் மீது மண் போட்டு மூடி விடும் படியும் கூறியுள்ளார்.
அதன்படியே, வசந்தாவும் செய்ய, குழிக்குள் புதைக்கப் பட்டார் மாஸி. நெடுநேரமாகியும் மாஸியிடம் இருந்து எந்தவித சிக்னலும் வராமல் போகவே, சந்தேகமடைந்த பொதுமக்கள் குழியைத் தோண்டி உள்ளே பார்த்தனர்.
உள்ளே மயக்கமான நிலையில் கிடந்த மாஸியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை சோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 3 மணி நேரமாக சுவாசிக்க காற்று இல்லாமல் குழிக்குள் அடைபட்டுக் கிடந்ததே மாஸியின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications