நள்ளிரவில் 'பேரதிர்ச்சி..' அப்படியே இடிந்து தரைமட்டமான வீடு.. கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் கனமழை காரணமாக பெலகாவி என்ற கிராமத்தில் வீடு இடிந்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
இந்த ஆண்டு தொடக்கம் முதலே நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நாட்டிலுள்ள முக்கிய ஆறு, குளங்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன.
அதேநேரம் இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் சில மாநிலங்களில் வெள்ளம் ஏற்படும் அளவுக்குக் கனமழை பெய்து, உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

கர்நாடகாவில் விபத்து
அப்படியொரு சம்பவம் தான் தற்போது அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதுமே கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்தச் சூழ்நிலை கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பாதல்-அங்கால்கி கிராமத்தில் வீடு இடிந்து விபத்து ஏற்பட்டது.

7 பேர் பலி
நேற்றிரவு 9 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்பை, உயிரிழந்தோரின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தல 5 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து ஹிரேபாகேவாடி காவல் நிலைய துணை ஆணையர் எம்ஜி ஹிரேமாட் கூறுகையில், "கனமழை காரணமாக வீடு இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு கைக்குழந்தையும் உயிரிழந்துள்ளது. உயிரிழந்தோருக்குப் பிரேதப் பரிசோதனை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

கர்நாடக முதல்வர்
இந்த விபத்தில் உயிரிழந்த 7 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். மற்ற இருவர் சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து உள்ளனர். இந்த விபத்தில் கொல்லப்பட்ட 7 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகும். பெலகாவி மாவட்ட அமைச்சரைச் சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்லும்படி உத்தரவிட்டுள்ள முதல்வர் பசவராஜ் பொம்பை, மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். இரவு நேரத்தில் கனமழை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரமதர் மோடி
பிரமதர் மோடியும் இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடகாவின் பெலகாவியில் வீடு இடிந்து ஏற்பட்ட விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது. இதில் உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமரின் பேரிடர் மீட்பு நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம் வழங்கப்படும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications