ஸ்பீக்கரில் தொழுகைக்கு அழைப்பு.. ஒலி மாசு செய்யாதீங்க..! கர்நாடகாவில் மசூதிகளுக்கு பரபர நோட்டீஸ்!
பெங்களூர்: பெங்களூரில் அதிகாலை மற்றும் இரவில் தொழுகைக்கு மசூதிகளில் ஸ்பீக்கர் மூலம் விடுக்கப்படும் அழைப்பிற்கு போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உடுப்பியில் உள்ள ஹொஸா மார்குடி கோவிலில் நடக்கும் விழாவில் இஸ்லாமியர்கள் கடை போட தடை விதிக்கப்பட்டது.இங்கு எல்லா வருடமும் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கடை போட்டு வந்தனர்.
இந்த வருடம் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகாவில் ஹலால் பொருட்களை வாங்க கூடாது என்றும் இந்துக்கள் இடையே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்கள்
இது போக இஸ்லாமியர்களின் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் அங்கு வழிபாட்டு தளங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலில் சிக்மங்களூர் நகராட்சியில் இந்த கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவில் மற்ற பகுதிகளிலும் மசூதிகள், சர்ச்கள், கோவில்களில் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

என்ன கட்டுப்பாடு
அங்கு பொது இடங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் இத்தனை நாட்களாக பின்பற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில்தான் மசூதிகள், சர்ச்கள், கோவில்களில் மற்றும் பப்கள், பார்ட்டி நடக்கும் இடங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட வழிபாட்டு தலங்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.

மசூதிகள்
அதன்படி கர்நாடகாவில் 250க்கும் அதிகமான மசூதிக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஹைகோர்ட் அனுமதித்த அளவை விட அதிக அளவு டெசிபல் கொண்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்தியதாக கூறி இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 49 வழிபாட்டு தளங்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. இந்து வலதுசாரி அமைப்புகள் பல கொடுத்த புகாரின் அடைப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கட்டுப்பாடுகள்
கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் இது பற்றி தெரிவிக்கையில், நாங்கள் மசூதிகளில் மட்டும் இந்த கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. கோவில்கள், பப்கள், இரவு கேளிக்கை அரங்குகள் என்று அனைத்திலும் இப்படி லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்துபவர்கள் மீதும் தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறி உள்ளார். மொத்தமாக ஸ்பீக்கர்களை நீக்கவில்லை. அதன் ஒலி அளவை குறைத்துள்ளோம், என்றார். இது தொடர்பாக சில இந்து அமைப்புகள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளன. அதில் மசூதிகளில் ஸ்பீக்கர்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றன.

ஸ்பீக்கர்கள்
மருத்துவமனைகளுக்கு அருகில், அரசு அலுவலகங்கள் , பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் மசூதிகளில் கூட லவுட் ஸ்பீக்கரை பயன்படுத்துகிறார்கள். இது விதி மீறல். காலை மற்றும் இரவு வேளைகளில் தொழுகை நடத்த அழைப்பு விடுக்கிறார்கள். இதனால் மக்கள் தூங்குவதிலும், மாணவர்கள் படிப்பதிலும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் ஒலி மாசு ஏற்படுகிறது என்று போலீசாரிடம் சில இந்து அமைப்புகள் புகார் கொடுத்துள்ளது.

நோட்டிஸ்
இதை தொடர்ந்தே டிஜிபி உத்தரவின் பெயரில் 250 மசூதிகள் உட்பட 300+ வழிபாட்டு தலங்களுக்கு அங்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு 200 மசூதிகள் தற்போது குறைந்த ஒலியை பயன்படுத்தும் வகையில் புதிய ஒலி பெருக்கி சிஸ்டம்களை வாங்கி வைத்து உள்ளன. இதில் amplifier வைத்து ஒலியின் அளவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications