விடாமல் துரத்தும் சனாதன விவகாரம்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூர் நீதிமன்றம் மீண்டும் சம்மன்
பெங்களூர்: சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு எதிராக கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி சென்னையில் காமராஜர் அரங்கில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா, கோரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக்கூடாது.. ஒழித்து கட்ட வேண்டும்.

அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது.. ஒழிக்க வேண்டும். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்பது சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது.. மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அர்த்தம்.. ஆனால் எதுவுமே நிலையானது கிடையாது.. நாம் அனைத்தையும் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இடதுசாரிகளும் திமுகவும்" என்று பேசியிருந்தார்.
சனாதனம் குறித்து பேச்சு: உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்தியா கூட்டணிக் கட்சியில் இடம்பெற்றுள்ள தலைவர்களில் சிலரும் கூட தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஏற்றத்தாழ்வுகள் குறித்தே தான் அவ்வாறு பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்த போதிலும் இந்த விவகாரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட பாஜக தொடர்ந்து அவரை விமர்சித்தது.
நேரில் ஆஜராக வேண்டும்: உதயநிதிக்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டது. அந்த வகையில், சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் பரமேஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
மீண்டும் சம்மன்: எனினும், உதயநிதி ஸ்டாலின் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கு நேற்று நீதிபதி பிரீத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. உதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்மனை அங்குள்ள உள்ளூர் போலீஸ் இணை கமிஷனர் மூலம் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications