வடலூர் வள்ளலார் பெருவெளியை புனித பூமியாக அறிவிக்க வேண்டும்.. பெங்களூரில் இருந்து ஸ்டாலினுக்கு கடிதம்
பெங்களூர்: வடலூர் வள்ளலார் பெருவெளியை புனித பூமியாக அறிவிக்கக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பெங்களூர் திருவள்ளுவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பெங்களூர் திருவள்ளுவர் சங்கம் சார்பில் நடைபெற்ற வள்ளலார் விழாவில் தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், திருவள்ளுவர் சங்கத் தலைவருமான முனைவர் எஸ்.டி. குமார், வடலூரில் உள்ள வள்ளலார் உருவாக்கிய பெருவெளியை, புனித பூமியாக அறிவிக்கக் தமிழக அரசுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்புவதாக கூறினார்.

அதன் அடிப்படையில் பல்வேறு வள்ளலார் அமைப்புகளின் முக்கிய பிரமுகர்களுடன் கலந்து ஆலோசனை செய்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு வள்ளலாரின் பெருவெளி பகுதியை புனித பூமியாக அறிவிக்க பெங்களூர் திருவள்ளுவர் சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
இது குறித்து பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் எஸ். டி. குமார் கூறுகையில், "ஒட்டுமொத்த வடலூரையும் நாங்கள் புனித பூமியாக அறிவிக்க கோரவில்லை. வள்ளலார் உருவாக்கிய பெருவெளியை உள்ளடக்கிய சுற்றுப்புற பகுதியை மட்டுமே புனித பூமியாக அறிவிக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்வேறு வள்ளலார் சங்க முக்கிய பிரமுகர்களுடன் பேசி கருத்தொற்றுமை ஏற்படுத்தியுள்ளதன் அடிப்படையில், தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான வள்ளலார் அமைப்புகள் தமிழக அரசுக்கு கடிதங்கள் அனுப்பி தங்களது வேண்டுகோளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பார்கள்.

மேலும் மாபெரும் உலக அதிசயமான, 158 ஆண்டுகளாக தொடர்ந்து அணையா அடுப்பாக இருக்கும் சத்திய தரும சாலை தொடங்கிய 25.5.25 அன்று நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு, வள்ளலாரை பின்பற்றும் திரளுடன், வடலூரில் உள்ள வள்ளலார் சங்க அமைப்புகளுடன் இணைந்து வள்ளலாரின் பெருவெளி பகுதியை புனித பூமியாக அறிவிக்க தமிழக அரசுக்கு குரல் கொடுப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இந்த சத்திய ஞான சபையில் மாதம்தோறும் பூச நட்சத்திரத்திலும், வருடத்தில் ஒரு நாள் தைப்பூச தினத்தன்றும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம். தைப்பூச தினத்தன்று பல லட்சம் பேர் வள்ளலார் பெருவெளியில் கூடி தைப்பூச ஜோதி தரிசனத்தை கண்டுகளிப்பார்கள். இந்தச் சூழலில் தான் பெங்களூர் திருவள்ளுவர் சங்கம், வள்ளலார் பெருவெளியை புனித பூமியாக அறிவிக்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications