வேலியில் போன ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்ட பாஜக.. காங்கிரசுக்கு எதிராக அடித்த செல்ப் கோல்
பெங்களூர்: லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக வசமாக "செல்ப் கோல்" ஒன்றை அடித்துள்ளது.
கால்பந்தில் உங்கள் அணியின் கீப்பர் இருக்கும் சைடுலேயே கோல் அடிப்பதை செல்ப் கோல் என்பார்கள். அப்படி ஒன்றைத்தான் பாஜக கர்நாடகாவில் செய்துள்ளது.

ஏப்ரல் 26 ஆம் தேதி மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் மிக தீவிரமாக பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இரண்டாம் கட்டத் தேர்தலில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 2,633 வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,206 வேட்பாளர்கள், மணிப்பூர் பிசியில் இருந்து 4 வேட்பாளர்கள் இந்த கட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மோடி பேச்சு; இந்த தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் வாக்குறுதி ஒன்றை மையப்படுத்தி மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். அதில், இந்துக்களின் சொத்துக்களை எடுத்து இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு மட்டும் கூடுதல் இட ஒதுக்கீடு கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறி உள்ளார்.
ராஜஸ்தானில் இது பற்றி பேசிய பிரதமர் மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.
இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
எழுந்த சர்ச்சை; இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.
பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மங்களத்தை கூட விட்டுவைக்காது, என்று பிரதமர் மோடி கடுமையாக பேசி இருக்கிறார்.
பாஜக செல்ப் கோல்: இதை வைத்து பிரச்சாரம் செய்த கர்நாடகா பாஜக ஒரு போஸ்ட் செய்துள்ளது. அதில் இந்துக்களின் சொத்துக்களை எடுத்து இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளதாக பாஜக விமர்சனம் செய்துள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து உள்ளது.
அதில் இஸ்லாமியர் என்ற வார்த்தையே இல்லை. வேலை வாய்ப்பில் ஓபிசி, எஸ்டி, எஸ்சி, சிறுபான்மையினர் என்று எல்லோருக்கும் இடஒதுக்கீடு முன்னுரிமை வழங்கப்படும். நீதிபதி நியமனத்தில் ஓபிசி, எஸ்டி, எஸ்சி, சிறுபான்மையினருக்கு முன்னுரிமை வழங்கப்படும், ஓபிசி, எஸ்டி, எஸ்சி, சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்தப்படும். ஓபிசி, எஸ்டி, எஸ்சி, பலன் பெற ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
காங்கிரசின் இந்த வாக்குறுதியை பாஜக தற்போது பகிர்ந்து செல்ப் கோல் அடித்துள்ளது. காங்கிரஸ் ஓபிசி, எஸ்டி, எஸ்சி, சிறுபான்மையினருக்கு என்று எல்லோருக்கும்தான் இந்த திட்டம் என்று சொன்னதை பாஜகவே பகிர்ந்து உள்ளது.












Click it and Unblock the Notifications