ஹிஜாப்பும் வேணாம்.. காவியும் வேணாம்.. ஒரே போடாக போட்ட அண்ணாமலை.. அதுவும் கர்நாடகாவில்.. என்னவாம்?
பெங்களூரு: கர்நாடகாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, வகுப்பறைகளில் ஹிஜாப்பும் வேண்டாம் காவி உடையும் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே காங்கிரஸின் கூட்டணி ஆட்சியிலிருந்து சில எம்எல்ஏக்கள் பாகஜவுக்கு தாவியதால் காங்கிரஸ் பாதியிலேயே ஆட்சியை இழந்தது. இதனையடுத்து பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இதனால் இரு கட்சிகளுக்கிடையேயும் கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அந்த வகையில் எதிர்வரும் தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கையில்தான் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும், இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, "வகுப்பறைகளில் ஹிஜாப்பும் வேண்டாம் காவி உடையும் வேண்டாம்" என்று கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "ராகுல்காந்தி கர்நாடகாவில் அமராக மாறி உள்ளார். வேறு மாநிலத்தில் தேர்தல் நடந்தால் அக்பராகவும், ஆன்டனியாகவும் மாறுவர். அதனால் தான் ராகுல்காந்தியை அமர் அக்பர் ஆண்டனி என அழைக்கிறோம்.
கர்நாடகாவில் பல்வேறு காலகட்டங்களில் தமிழர்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். இம்மாநிலத்தில் பொருளாதாரத்தில் எல்லா நிலையிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். இங்குள்ள தமிழர்கள் பாஜக ஆட்சியை பார்த்து உள்ளனர். அவர்கள் பாஜகவை ஆதரிக்க தயாராக உள்ளனர். பெங்களூரில் 12 தொகுதிகளுக்கு மேல் தமிழர்கள் அதிக அளவில் உள்ளனர்" என்று கூறியுள்ளார். மேலும் திமுக குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "கர்நாடகாவில் திமுகவை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. கும்மிடிப்பூண்டியை தாண்டி திமுக செல்வது இல்லை" என்று கூறியுள்ளார்.
அதேபோல கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு, "ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்காக 224 தொகுதிகளிலும் நாங்கள் வேட்பாளரை நிறுத்தி உள்ளோம். கர்நாடகாவில் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஒரு வேட்பாளர் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளவர்கள் பற்றி இங்கு பேசுவது நன்றாக இருக்காது. தமிழருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சிரமப்பட்டு பாஜக ஒரு வேட்பாளரை நிறுத்தி உள்ள பொழுது அவரை எதிர்த்து ஏன் வேட்பாளரை நிறுத்தி உள்ளீர்கள் என அவர்களிடம்தான் (அதிமுக) கேட்க வேண்டும்.

அதேபோல திமுக மீதான குற்றச்சாட்டுகளை பொறுத்த அளவில் ஏப்ரல் 14 தேதி செய்தியாளர் சந்திப்பில் என்ன விதமான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளோமோ அனைத்துக்கும் சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபிக்கக் கூடிய தைரியமும் தன்மையும் என்னிடம் உள்ளது. திமுகவில் இதுவரை மூன்று பேர் வழக்கு தொடுத்துள்ளார்கள் அவர்கள் அளித்த நோட்டீசை ஏற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளேன். கர்நாடகத்தை பொறுத்த அளவில் பாஜக மீண்டும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி சமீபத்தில் நடத்திய பாரத் ஜடோ யாத்திரை கர்நாடக தேர்தலில் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ராகுல் காந்தியை மக்களவை செயலகம் தகுதி நீக்கம் செய்தது. இதற்கு காரணமாக இருந்தது 2019ம் ஆண்டு கோலார் தொகுதியில் அவர் ஆற்றிய உரைதான். அதில்தான் மோடி சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே இந்த தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். ஆக இவ்வளவு முக்கியத்துவம் உள்ளதால் நிச்சயம் இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications