முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரம்: கர்நாடக அரசை சாடிய உச்ச நீதிமன்றம்
பெங்களூர்: கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசின் முடிவு முற்றிலும் தவறான அனுமானத்தின் அடிப்படையில் இருப்பதாகவும் குறைபாடுகள் கொண்டதாகவும் தெரிவதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 4 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த தனி இட ஒதுக்கீட்டை கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களுக்கு சமமாக பிரித்து வழங்கியது. கர்நாடகா அரசியலில் ஒக்கலிகர், லிங்காயத் சமூகத்தினருக்கு பெரிய செல்வாக்கு உண்டு.

இந்தச் சமூகத்தவரின் வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக சில மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதாக பேச்சு எழுந்தது. எனினும், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்த கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தில், கர்நாடக மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீடு பிற சமூகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளுக்கு எதிரானது. தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு முடிவை அவசரமாக எடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று வாதிட்டார்.
கர்நாடக அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் கர்நாடக அரசு தவறான எண்ணத்தில் அடிப்படையில் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. கர்நாடக அரசின் இந்த முடிவுகள் குறைபாடுகள் நிறைந்ததாகவும் உள்ளது" என்று தெரிவித்ததது.

கர்நாடக அரசின் முடிவு முற்றிலும் தவறான அனுமானத்தின் அடிப்படையில் இருப்பதாகவும் குறைபாடுகள் கொண்டதாகவும் தெரிவதாக கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம் வழக்கின் விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. கர்நாடக அரசு மற்றும் ஒக்கலிகர், லிங்காயத் பிரதிநிதிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், வரும் 18 ஆம் தேதி வரை எந்த ஒரு நியமனங்களையும், அட்மிஷன்களையும் மேற்கொள்ள மாட்டோம் என்று கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications