இப்படி ஆகிடுச்சே.. சென்னை - பெங்களூர் விரைவுச்சாலை.. வாகன ஓட்டிகளுக்கு நிதின் கட்காரி கொடுத்த ஷாக்
பெங்களூர்: சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே சாலையில் கர்நாடக பகுதியில் பணிகள் முடிந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் வாகன போக்குவரத்துக்கு சாலை திறந்துவிடப்பட்டுள்ளது. எனினும், தமிழகம் மற்றும் ஆந்திராவில் சாலை பணிகள் முடியாததால் எக்ஸ்பிரஸ்வே சாலை முழுவதுமாக பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் முழுவதும் முடிந்து சாலை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் தாமதம் ஆகும் என்று தெரியவந்துள்ளது.
தென் இந்தியாவின் மிக முக்கிய நகரங்களாக பெங்களூர் - சென்னை உள்ளது. தொழில், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு என பல்வேறு காரணங்களுக்காக இரு நகரங்களுக்கு இடையிலும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். சென்னையில் இருந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெங்களூருக்கு தற்போது சாலை வழியாக பயணம் செய்தால் 7 மணி நேரம் ஆகிறது.

எப்போது பயன்பாட்டுக்கு வரும்
இந்த சூழலில்தான், சென்னை - பெங்களூர் இடையே அதிவிரைவுச்சாலை அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையின் கர்நாடகப் பகுதி முழுமையடைந்து போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அந்த சாலையில் தற்போது வாகன ஓட்டிகளால் முழு அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. .
கர்நாடக பகுதியில் திறக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ்வே சாலை வழியாக ஹோஸ்கோட், மலூர், கேஜிஎப் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல முடியும் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவு இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள். அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு நடப்பதால் பைக்குகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முதல் பைக்குகள் செல்ல தடை விதித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம்
இரு சக்கர வாகனங்கள் நுழையமுடியாதபடி அணுகு சாலைகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுளன. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இன்னும் முடிக்கப்படாத நிலையில், 260 கிமீ விரைவுச் சாலை எப்போது முடிக்கப்படும் என்ற எதிபார்ப்பு பயணிகள் இடையே ஏற்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த சாலை 2025 ஆகஸ்ட் மாதம் முழுவதும் பயன்பாட்டுக்கு விடப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனால், பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
தற்போது பெங்களூர் - சென்னை விரைவுச்சாலை முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் நாள் என்பது மீண்டும் தள்ளிப்போயுள்ளது. அதாவது, ஜூன் 2026-க்குள் முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் இந்த விரைவுச்சாலை தொடர்பாக எம்.பி. லஹர் சிங் சிரோயா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதின் கட்காரி, சென்னை- பெங்களூர் விரைவுச்சாலையில் மீதமுள்ள பகுதி ஜூன் 2026-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
4 மணி நேரத்தில் சென்றுவிடலாம்
17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சென்னை- பெங்களூர் விரைவுச்சாலை திறக்கப்பட்டால் சென்னையில் இருந்து பெங்களூருக்கு வெறும் 4 மணி நேரத்தில் செல்ல முடியும். இதனால் பயணிகளின் பயண நேரம் மிச்சம் ஆகும் என்பதோடு, எரிபொருள் செலவும் குறையும். கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ரூட்டிற்கு மாற்று ரூட்டாகவும் இந்த விரைவுச்சாலை ரூட் இருக்கும்.
சென்னை - பெங்களூர் ரூட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசலும் அதிக அளவு உள்ளது. எனவேதான் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாகவும் சென்னை - பெங்களூர் விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு ஏமாற்றம்
சென்னை - பெங்களூர் விரைவுச்சாலை பணிகள் முழுவதுமாக முடிவதில் தொடர்ந்து தாமதம் ஆகிக்கொண்டே வருவது வாகன ஓட்டிகளுக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் கொடுப்பதாக அமைந்துள்ளது. விரைவில் முழு சாலையும் திறக்கப்பட்டால் சரக்கு போக்குவரத்து முதல் பயணிகள் போக்குவரத்து என அனைத்து வேற லெவலில் மாறும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், தற்போது ஆகஸ்ட் காலக்கெடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு போயிருப்பது வாகன ஓட்டிகள் மட்டும் இன்றி பொதுமக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications