பஞ்சாயத்து எல்லாம் ஓவர்.. இனி தங்கம் விலை 30% சரியும்! பாயிண்டை சரியாக விளக்கிய பிரபல வல்லுநர்
சென்னை: இந்த ஆண்டு தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்கனவே 30% உயர்ந்துவிட்டது. ஏற்கனவே தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்துவிட்ட நிலையில், இனிமேல் இந்தாண்டு தங்கம் விலை உயர வாய்ப்பு குறைவு என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதனால் அடுத்த ஓரிரு மாதங்களில் தங்கம் விலை சுமார் 10% வரை குறையலாம். இந்தாண்டு இறுதிக்குள் சுமார் 30% குறையலாம் என்கிறார்கள் வல்லுநர்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக டிரம்ப் வந்த பிறகு, அவர் செய்யும் பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்தாண்டு தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்கனவே 30%க்கு மேல் உயர்ந்துவிட்டது.

புதிய உச்சத்தில் தங்கம் விலை
இந்தாண்டு தங்கம் விலை ஏற்கனவே புதிய உச்சத்தை அடைந்துவிட்டதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதன் காரணமாகவே இஸ்ரேல் ஈரான் மோதல் உச்சத்திற்குப் போன போதும் கூட தங்கம் விலை பெரியளவில் உயரவில்லை. மேலும், மோதல் முடிவுக்கு வந்த உடனேயே தங்கம் விலை தாறுமாறாகச் சரியவும் ஆரம்பித்துவிட்டது. இதனால் தங்கம் விலை வரும் காலத்தில் குறையும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பிரபல சிட்டி வங்கி அடுத்த ஒரு வருடத்திற்கான தங்கத்தின் விலை டார்கெட்டை குறைத்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை கணிசமாகக் குறையும் என்கிறார்கள். அதேபோல அடுத்த 6-12 மாதங்களில் ஒரு அவுன்ஸ் தங்கம் $3,000- $2,800ஆக குறையும் என்ற தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
வல்லுநர்கள் சொல்வது என்ன
இது தொடர்பாக வல்லுநர் அஜய் கேடியா பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "கடந்த 10-20 ஆண்டுகளில் மத்திய கிழக்கில் இந்தளவுக்கு ஒரு போர் சூழ்நிலையை நாம் பார்த்ததில்லை.. புவிசார் அரசியல் நிலைமை மோசமாகி வருகிறது. ஆனால் தங்கம் விலை முதல் நாள் மட்டுமே உயர்ந்தது. அதன் பிறகு பதட்டங்கள் அதிகரித்த போதிலும் தங்கம் விலை உயரவில்லை. தங்கம் விலை ஏற்கனவே உச்சம் தொட்டுவிட்டதையே இது காட்டுகிறது.
கடந்த காலங்களிலும் தங்கம் விலை இதுபோல உயர்ந்துள்ளது. ஆனால், அதன் பிறகு கணிசமான அளவுக்குத் தங்கம் விலை பெரியளவில் உயரவில்லை. ஏற்கனவே, கடந்த ஐந்து ஆண்டுகளில் புவிசார் அரசியல் பதட்டங்கள், மத்திய வங்கி தங்கம் வாங்குவது, இடிஎஃப், டாலர் மதிப்பு சரிவது என எல்லா காரணங்களாலும் தங்கம் விலை ஏற்கனவே உயர்ந்துவிட்டது.
30% வரை தங்கம் விலை சரியும்
இதனால் அடுத்த ஓரிரு மாதங்களில், தங்கம் விலை 8-10% வரை எளிதாகக் குறையும். அதுபோல அடுத்த ஒரு வருடத்தில் தங்கம் விலை $2,700-2,800ஆக குறையலாம். சர்வதேச பதற்றங்கள் குறைந்தால் அது $2,400ஆகக் கூட குறையலாம்" என்றார். அதாவது இப்போதைய தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும்போது $2,400 என்பது 30%க்கும் மேலான சரிவாகும்.
உண்மையில் தங்கம் விலை சரிவது மக்களுக்கு எந்தளவுக்கு நல்லதோ.. அதே அளவுக்கு நகைக்கடன் உரிமையாளர்களுக்கும் நல்லது. ஏனென்றால் தங்கம் விலை உயர்வால் தங்கம் நகை விலை விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் பெரும்பாலான நகைக்கடை உரிமையாளர்கள் பெரும் சிரமத்தையே சந்தித்து வருகிறார்கள். தங்கம் விலை குறைந்தால் மீண்டும் விற்பனையும் அதிகரிக்கும் என்பதால் நகைக்கடன் உரிமையாளர்களும் கூட தங்கம் விலை குறையவே வேண்டும் என்கிறார்கள்.
தங்க விற்பனை
இது தொடர்பாகப் பிரபல நகைக்கடன் உரிமையாளர் ஷ்ரேயான்ஷ் பிரபல ஆங்கில ஊடகத்திடம் பேசுகையில், "நான் இவ்வளவு பேர் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்றுப் பார்த்ததே இல்லை. எனது 25 வருட அனுபவத்தில் இத்தனை பேர் பழைய நகைகளை விற்க முன்வந்து பார்த்ததில்லை. முன்பு 5-7% பேர் மட்டுமே தங்கள் பழைய நகைகளை விற்க வருவார்கள். இப்போது அந்த எண்ணிக்கை 25%ஆக அதிகரித்துள்ளது" என்றார்.
எல்லா வல்லுநர்களும் சொல்வது அதையேதான்
முன்னதாக குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் கிட்டதட்ட இதே கருத்துகளைத் தான் கூறியிருந்தது. தங்கம் உச்சத்தை எட்டிவிட்டது என்றும் அடுத்த இரண்டு மாதங்களில் 12-15% வரை குறையும் என்று குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் கூறியிருந்தது. இந்தச் சூழலில் தான் அஜய் கேடியாவும் தங்கம் விலை குறையலாம் எனக் கூறியிருக்கிறார். மத்திய கிழக்கு மோதல் உச்சத்தில் இருந்தபோதும் தங்கம் விலை உயராததையே அவர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறார். இதனால் 30% வரை தங்கம் விலை குறையும் என்கிறார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications