விடிய விடிய தொடர்ந்த மாணவர் போராட்டம்! இன்று மீண்டும் நாடாளுமன்ற முற்றுகை அறிவிப்பு! தொடரும் பதற்றம்
டெல்லி: கரப்பான் பூச்சி கட்சியினர் நீட் தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் தொடரும் என்று அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை நோக்கி செவ்வாய்க்கிழமையும் மீண்டும் பேரணி நடத்தப்படும் என்றும், ஜந்தர் மந்தரில் இருந்து போராட்டக்காரர்கள் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனால் டெல்லியில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.
டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்திக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது. நேற்றைய தினம் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்த நிலையில், நேற்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இருப்பினும், போலீசார் அவர்களைப் பேரணி செல்ல அனுமதிக்கவில்லை.

டெல்லி போலீஸ்
நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்ற போராட்டக்காரர்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சில இடங்களில் கற்கள் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்த நிலையில், கூட்டத்தைக் கலைக்க தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த மோதலில் 118-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், போலீசார் நடத்திய தடியடியில் பல போராட்டக்காரர்களும் காயமடைந்தனர்.
பரபர காட்சிகள்
குறிப்பாக சிலர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட அருகே சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார், நாடாளுமன்ற வளாகத்தையும் இழுத்து மூடினர். மேலும், ஒரு கட்டத்தில் நாடாளுமன்றத்தை நோக்கி வந்தவர்களை நோக்கி போலீசார் துப்பாக்கியுடன் நின்றது பரபரப்பை மேலும் அதிகரித்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருப்பினும், மோசமான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
மீண்டும் முற்றுகை
மாலை மீண்டும் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் மீண்டும் ஜந்தர் மந்தரில் திரண்டு, புதிய கூடாரம் மற்றும் தற்காலிக மேடையை அமைத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். மழை பெய்த நிலையிலும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையே போராட்டம் குறித்து பேசிய கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜீத் திப்கே, "தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும். செவ்வாய்க்கிழமையும் நாடாளுமன்றத்தை நோக்கி மீண்டும் பேரணி நடத்தப்படும்" என்று உறுதிப்பட தெரிவித்தார்.
பின்னணி
இதற்கிடையில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வந்துள்ளது. கரப்பான் பூச்சி பிரதிநிதிகள் நேற்று மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை இரண்டு முறை சந்தித்தார். முதல் சந்திப்பில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கேட்டதாகவும், பின்னர் மீண்டும் சந்தித்த போது மூன்று முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்பட்டதாகத் தெரியவில்லை.
இதனிடையே, திங்கள்கிழமை நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகளை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர். சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகள், செல்போன் வீடியோக்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வன்முறைக்கு பின்னால் சதி ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications
