முஸ்லீம் இளைஞர்கள் உயிருடன் எரித்து கொலை? பசு காவலர்கள் செயல் என சந்தேகம்.. உறைய வைக்கும் சம்பவம்
ஹரியானா மாநிலத்தில் இருவரின் சடலம் எரிந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் இரண்டு இளைஞர்களின் உடல்கள் எரிந்த நிலையில் கண்டறியப்பட்ட நிலையில், இது பசுக்காவலர்கள் என்று கூறப்படுவோரின் செயலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிகன்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இரு முஸ்லீம் இளைஞர்கள், நேற்றைய தினம் ஹரியானாவில் எரிந்த நிலையில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பசுக் காவலர்களால் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக ஹரியானா போலீசார் முக்கிய நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.

ஹரியானா
ஹரியானாவில் காரில் எரிந்த நிலையில் இரண்டு முஸ்லிம் ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பசுக் காவலர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் இருந்து கடந்த புதன்கிழமை நசீர் (25), ஜுனைத் (35) ஆகியோர் கடத்தப்பட்டதாக, அவர்களது குடும்பத்தினர் போலீசில் அளித்துள்ளனர்.

எரிந்த சடலங்கள்
இந்தச் சூழலில் தான் ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் நேற்று காலை மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியில் நசீர் மற்றும் ஜுனைத் ஆகியோரின் உடல்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த சடலங்கள் நசீர் மற்றும் ஜுனைத் ஆகியோரின் சடலங்களா என்பதை உறுதி செய்யும் முயற்சியில் போலீசார் இப்போது தீவிரமாக இறங்கியுள்ளனர்.

போலீசார் தகவல்
இது தொடர்பாக அப்பகுதியின் போலீசார் அதிகாரி கௌரவ் ஸ்ரீவஸ்தவா கூருகையில், "காரில் அடையாளம் தெரியாத இருவரின் உடல்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர்கள் தான் இப்போது சடலமாகக் கண்டறியப்பட்டுள்ளனரா என்பதை அறிய, குடும்ப உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளோம்.. பிரேதப் பரிசோதனை மற்றும் டிஎன்ஏ பகுப்பாய்வுக்குப் பிறகு, அவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரிய வரும்.

உயிருடன் எரித்து கொலை
இருவரும் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனரா அல்லது காரில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடத்தப்பட்ட இருவரின் குடும்பத்தினர் வாகனத்தை அடையாளம் கண்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் பசுக் காவலர்கள் என்று சொல்லிக் கொள்வோருக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பசுக்காவலர்கள்
ஜுனைத் மீது பசுக் கடத்தல் தொடர்பான ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் நசீர் மீது எந்தவொரு கற்ற வழக்கும் இல்லை என்றும் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். நசீர் மற்றும் ஜுனைட்டை கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் மோனு மானேசர், லோகேஷ் சிங்யா, ரிங்கு சைனி, அனில் மற்றும் ஸ்ரீகாந்த் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

யார் அவர்கள்
இதில் முக்கியமாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மோனு மானேசர் வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர். குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் தங்களைப் பசுக் காவலர்கள் என்று கூறுகின்றனர். அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் செய்திருந்தால் தக்க தண்டனை பெற்றுத்தரப்படும் என்று போலீசார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications