99% பேட்டரி சார்ஜ் இருந்த EVM-களில் பாஜகவுக்கு அதிக ஓட்டு.. காங்கிரஸ் எழுப்பிய சந்தேகம்.. EC மறுப்பு
சண்டிகர்: ஹரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்த நிலையில், சிறிது நேரத்தில் நிலைமை மாறி, பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, இவிஎம் இயந்திரங்களில் சார்ஜ் 99% காட்டியதில் பாஜக வெற்றி பெற்றதாகவும், 70% பேட்டரி சார்ஜ் இருந்தவற்றில் காங்கிரஸ் அதிக வாக்குகள் பெற்றதாகவும் கூறி சந்தேகம் எழுப்பியது காங்கிரஸ். இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 67.90% வாக்குகள் பதிவாகின. ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகித்த நிலையில், 10 மணிக்கு மேல் நிலைமை மாறி, பாஜகவின் கை ஓங்க ஆரம்பித்தது.

ஹரியானா ரிசல்ட்: இறுதியில் பாஜக 48 இடங்களில் வென்று ஹரியானாவில் ஆட்சியை தக்கவைத்தது. காங்கிரஸ் கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3வது முறையாக ஹரியானாவில் பாஜக தொடர்ந்து ஆட்சி அமைக்க உள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், ஹரியானாவில் காங்கிரஸ் ஜெயிக்கும் எனக் கூறிய நிலையில், எக்ஸிட் போல் கணிப்புகளை பொய்யாக்கி வென்றது பாஜக.
இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஹரியானா தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பாராதவை. இது அடிப்படை யதார்த்தத்திற்கு எதிரானது. இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. முதற்கட்டமாக 3 மாவட்டங்களில் வாக்கு எண்ணும் செயல்முறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து எங்களுக்குக் கடுமையான புகார்கள் வந்துள்ளன.
காங்கிரஸ் புகார்: ஹரியானாவில் உள்ள மூத்த நிர்வாகிகளிடம் பேசி, இது தொடர்பாகத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிப்போம். தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் வேட்பாளர்களால் சீரியஸான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. நாங்கள் அதனைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம். ஹரியானாவில் நடந்துள்ளது சூழ்ச்சி வெற்றி. மக்களின் விருப்பத்தை சிதைத்ததற்கான வெற்றி. இது வெளிப்படையான ஜனநாயக செயல்முறைகளுக்குக் கிடைத்த தோல்வி.
ஹரியானா தேர்தல் முடிவைப் பற்றி என்ன பகுப்பாய்வு செய்ய வேண்டுமோ, அதை நிச்சயம் செய்வோம். எங்கே தவறு செய்தோம் என்பதைப் பற்றிய அலசல் நிச்சயம் இருக்கும். இது தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவும் அமைக்கப்படும். இது காங்கிரஸ் கட்சியில் உள்ள வழக்கமான நடைமுறை தான். ஆனால் இது குறித்து பகுப்பாய்வு செய்யவதற்கான நேரம் இது இல்லை. தேர்தல் வெற்றி எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. சிஸ்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பதுதான் இப்போதைக்கு முக்கியமான விஷயம்" எனத் தெரிவித்தார்.
இவிஎம் பேட்டரி: மேலும், இவிஎம்மில் 60 - 70% பேட்டரி சார்ஜ் இருந்தவற்றில் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னணியில் இருந்தது என்றும், அதே நேரத்தில் 99% சார்ஜ் கொண்ட இவிஎம் இயந்திரங்கள் பாஜகவுக்கு ஆதரவாக கையாளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார். இது சதி இல்லை என்றால் என்ன? என அவர் கேள்வி எழுப்பினார்.
ஹிசார், மகேந்திரகர் மற்றும் பானிபட் போன்ற இடங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு தொடர்பாக புகார்கள் வந்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறினார். பல சுற்று எண்ணிக்கைக்குப் பிறகு சில EVMகள் 99% பேட்டரி சார்ஜை கொண்டிருப்பதாக சில வேட்பாளர்கள் குறிப்பிட்டதாகவும், அத்தகைய இயந்திரங்களின் முடிவுகள் எல்லாம் காங்கிரஸுக்கு எதிராக இருப்பதாகவும் அவர் கூறினார். 60% முதல் 70% வரை சாதாரண பேட்டரி சார்ஜ் கொண்ட இயந்திரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் மறுப்பு: அதேசமயம், தேர்தல் ஆணைய தரப்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பேட்டரி தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. பேட்டரி 7.5 மற்றும் 8 வோல்ட் இடையே மின்னழுத்தத்தை வழங்குகிறது. மின்னழுத்தம் 7.4க்கு மேல் இருக்கும்போது பேட்டரி திறன் 99 சதவீதம் என காட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EVM கண்ட்ரோல் யூனிட்டில் அல்கலைன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. EVM பயன்படுத்தப்படுவதால், அதன் பேட்டரி திறன் குறைகிறது, அதன் விளைவாக மின்னழுத்தமும் குறைகிறது. மின்னழுத்தம் 7.4க்குக் கீழே செல்லும் போது, EVM இன் பேட்டரி திறன் 98 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை காட்டப்படும். சார்ஜ் 10 சதவீதத்துக்கும் கீழே செல்லும்போது, வாக்குப்பதிவு இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட் டிஸ்பிளேயில் எச்சரிக்கை தோன்றும்.
வாக்கு எண்ணும் நாளில் பேட்டரியின் மீதமுள்ள திறன் என்பது, கண்ட்ரோல் யூனிட், மாதிரி வாக்கெடுப்பு, உண்மையான வாக்கெடுப்பு நடந்த நாளில் ஏற்பட்ட திறன் இழப்பு மற்றும் பேட்டரியின் ஆரம்ப மின்னழுத்தம் (8 முதல் 7.5 வோல்ட்) ஆகியவற்றைப் பொறுத்தது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications