கடைசி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை.. ஜனநாயக படுகொலை என ஆம் ஆத்மி விமர்சனம்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்த நிலையில், அதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீரென ரத்து செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் 'ஆப்ரேஷன் தாமரை' திட்டத்தை பாஜக செயல்படுத்த முயன்று வருவதாகவும், இத்திட்டம் மூலம் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க திட்டமிட்டிருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.
தற்போது இதனைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தனது பலத்தை நிரூபிக்க ஆம் ஆத்மி திட்டமிட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தான் வழங்கிய அனுமதியை ஆளுநர் ரத்து செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் பல்வேறு வாக்குறுதிகளுடன் சமீபத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இதனையடுத்து, தேர்தலில் வெற்றியும் பெற்றது. ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் இந்த வெற்றி பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனையடுத்து, இரு கட்சிகளும் அவ்வப்போது பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டன. ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக கெஜ்ரிவால் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

அமைச்சரவை முடிவு
மேலும், கட்சியின் 10 எம்எல்ஏக்களிடம் ரூ.25 கோடி பேரம் பேசியதாகவும் பாஜக மீது குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு பாஜக 'ஆப்ரேஷன் லோட்டஸ்' என பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியிருந்தது. எனவே சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க கட்சி முடிவு செய்தது. 22ம் தேதியான இன்று இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கட்சியின் அமைச்சரவை கூடி முடிவெடுத்திருந்தது.

ரத்து
இதற்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால் நேற்றிரவு திடீரென இந்த உத்தரவை ஆளுநர் ரத்து செய்துள்ளார். இது அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாநில முதலமைச்சர் பகவத் மான் கூறியுள்ளதாவது, "சட்டப்பேரவையை நடத்த அளுநர் அனுமதிக்காதது நாட்டின் ஜனநாயகத்தின் மீது கேள்வியெழுப்புகிறது. ஜனநாயகம் கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நடத்தப்படுகிறதா? அல்லது மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவரால் மட்டும் நடத்தப்படுகிறதா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜனநாயக படுகொலை
முதலமைச்சரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த கெஜ்ரிவால் கூறுகையில், "அமைச்சரவையின் கூட்டத்தொடரை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்? ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் அளித்த அனுமதியை ஆளுநர் திடீரென ரத்து செய்தது ஏன்? மேலிடத்திலிருந்து அவருக்கு உத்தரவு வந்திருக்கிறது." என்று கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் ஆளுநர் செய்தது ஜனநாயக படுகொலை என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.
இந்த விஷயத்தில் காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும், மாநிலத்தில் காங்கிரஸ் பாஜகவின் 'பி' டீமாக செயல்படுவதாகவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications