இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வரும் விமானம் டெல்லியில்தானே இறங்கனும்? பஞ்சாப் முதல்வர் கேள்வி
சண்டிகர்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்தி வருகிறது. நாளையும், நாளை மறுநாளும் இரண்டு விமானங்கள் பஞ்சாபில் தரையிறங்குகின்றன. டெல்லியில் லேண்ட் ஆகாமல் ஏன் பஞ்சாபில் இந்த விமானங்கள் தரையிறங்குகிறது என அம்மாநில முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வரும் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியான விமர்சனங்களை எழுப்பியுள்ளன. இதற்கு மத்திய அரசு மௌனம் காத்து வருகிறது.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இது குறித்து கூறுகையில், "அமெரிக்காவில் சட்டவிரோமாக உள்ள இந்தியர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள். ஆனால் அவர்களை அழைத்து வரும் விமானம் நாளை பஞ்சாப்பில் தரையிறங்குகிறது. இந்த விமானம் தரையிறங்கும் இடமாக பஞ்சாப் தேர்வு செய்யப்பட்டது ஏன்? ஏற்கெனவே மோடியும் டிரம்ப்பும் நண்பர்கள் என்று சொல்லும்போது, மக்கள் ஏன் கைவிலங்கு போடப்பட்டு அழைத்து வரப்பட்டனர். இது டிரம்பின் பரிசா?
சொந்த மாநிலத்திற்கு மக்களை அனுப்பதான் பஞ்சாபில் தரையிறக்கப்படுகிறது என்றால், குஜராத்திலிருந்து அமெரிக்காவுக்கு போனவர்கள்தான் அதிகம். அப்படியெனில் அகமதாபாத்தில்தான் விமானம் தரையிறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பஞ்சாப்பில் விமானத்தை தரையிறக்குவதன் மூலம் எங்கள் மாநிலத்தை அவமதிக்க அவர்கள் நினைக்கிறார்கள்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விமானம் சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாபில் தரையிறங்கியிருந்தது. அதில் நூற்றுக்கும் அதிகமான இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் பலருக்கு கைகளிலும், கால்களிலும் விலங்கு போடப்பட்டிருந்தது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆண்களுக்கு மட்டுமே சங்கிலி போடப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு அப்படி எதுவும் போடப்படவில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால், விமானத்தில் வந்தவர்கள் அளித்த பேட்டியில், பெண்கள், குழந்தைளும் கூட சங்கிலியால் கட்டப்பட்டிருந்தனர் என்று தெரிவித்தனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை, டிரம்ப் ஏலியன் என்று அழைக்கிறார். அப்படியெனில் நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் 4 வயது குழந்தையும் இருந்திருக்கிறது. டிரம்ப் சொல்வதை வைத்து பார்த்தால் 4 வயது குழந்தையும் ஏலியனா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications