1.27 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது! இனி ரூ 1000 வராது! ஏன் என்னாச்சு?
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து 1.27 லட்சம் பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் ஆர்டிஐ மூலம் கிடைத்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ 1000 அவரவர் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் பயனடைய வேண்டுமானால் சில தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டன. அதாவது ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கு கீழ் வருமான ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலங்கள், 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலங்கள் வைத்திருப்பவர்கள் தகுதியுடையவர்கள்.
ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், கார், பைக் ஏதும் சொந்தமாக இல்லாதவர்கள், வருமான வரி செலுத்தாதோர் உள்ளிட்டோர் இந்த திட்டத்தில் பயனடையலாம். அது போல் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருக்கவே முடியாது.
கைம்பெண்கள், விதவைகளும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் பெற முடியும். ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் பெயர் புகைப்படம் இருந்தாலும் அந்த குடும்பத்தின் தலைவியாக பெண் கருதப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ 1000 பெறலாம். குடும்பத் தலைவிகள் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகள், தங்கள் பகுதிக்குட்பட்ட நியாய விலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே தகுதியானவர். இரு பெண்களுக்கும் ரூ 1000 கிடைக்காது. இப்படியாக பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு முதலில் 1.06 கோடி பேர் பயனாளிகளாக இருந்த நிலையில் அடுத்தடுத்து முகாம்கள் வைத்து பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
அந்த வகையில் கடந்த அக்டோபர் வரை 1.15 கோடி பேர் வரை இந்த திட்டத்தில் பயனடைந்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது 1.27 லட்சம் பெண்கள் அதிலிருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கிடைத்தது.
இதனால் பயனாளிகளின் எண்ணிக்கை 1.15 கோடியிலிருந்து 1.14 கோடியானது. இறப்பு, அதிக வருமானம், திட்டத்தில் சேர்ந்ததும் நிலம் வாங்குதல், அரசு பணிகள் பெற்றது உள்ளிட்ட காரணங்களுக்காக பயனாளிகள் நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இந்த திட்டம் மீண்டும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு விரைவில் முதல்வரிடம் ஆலோசனை நடத்தி மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்திருந்தனர்.
ஆனால் இதை பலர் தவறாக புரிந்து கொண்டனர். அதாவது ரேஷன் கார்டு வைத்திருந்தாலே மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என நினைத்துக் கொண்டனர். இதை அமைச்சரும் தெளிவுப்படுத்திவிட்டார். எனவே கலைஞர் உரிமைத் தொகையானது எல்லோருக்கும் கொடுக்கப்படாது. அரசு இந்த திட்ட பயனாளிகளுக்கு என சில அடிப்படை விதிமுறைகளை விதித்திருக்கிறது.
ரேஷன் கார்டில் வசிக்கும் முகவரியில் இல்லாதவர்கள், முகவரி உள்ளிட்ட ஆவணங்கள் தவறாக இருப்பவர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கொடுக்கப்படும் ரூ 1000 கிடைக்காது.












Click it and Unblock the Notifications