மக்கள் வெள்ளத்தில் மெரினா! விமான சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்! 20 பேருக்கு மயக்கம்
சென்னை: சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட சென்ற 20-க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்திய விமான படை 92 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி இன்று காலை 11 மணி வரை முதல் 1 மணி வரை நடைபெற்று வருகிறது.

விமான சாகச நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பார்வையிட்டு வருகிறார்கள். இதையொட்டி பொதுப் பணித் துறை சார்பில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் 15-க்கும் மேற்பட்ட சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சிக்காக எந்தவித கட்டணத்தையும் பொதுமக்களிடம் பெறவில்லை. இதை காண எந்த டிக்கெட்டும் கிடையாது. வாகனங்களை நிறுத்த மட்டுமே பாஸ் தேவை. மொத்தம் 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றன.
விமான சாகச நிகழ்ச்சியில் ஸ்டென்ட் ஷோக்களையும் இந்திய விமானப்படை செய்கிறது. விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி, சாரங் ஹெலிகாப்டர்கள், சுகோய் 30 எம்கேஐ, மிராஜ் 2000, மிக் 29, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ் உள்ளிட்டவையும் இருக்கின்றன.
முதலில் பாராசூட் சாகச நிகழ்ச்சிகளுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் நடத்திய பாதுகாப்பு ஒத்திகைகளும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வுக்கு வருவோர் குடை, தண்ணீர் பாட்டில், தேவையான உணவு ஆகியவற்றை கொண்டு வருமாறு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.
அதை போல் பலர் குழந்தைகளை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அரசு சொன்ன அறிவுரையை பின்பற்றி கொண்டு வந்துள்ளனர். மெரினாவில் சற்று வெயில் இருப்பதால் மக்கள் தொப்பி அணிந்தும் குடை பிடித்தபடியும் நின்றிருக்கிறார்கள்.
இந்த நிகழ்வுக்கு 15 லட்சம் பேர் வருகை தருவதாக மத்திய அரசு எதிர்பார்த்திருந்தது. இதனால் அங்கு நிறைய கூட்டம் இருக்கிறது. இந்த நெரிசலில் சிக்கிய பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 20-க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications