Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.2 லட்சம் செலவழித்து குவைத் போன தமிழர்கள்.. மோசமாக ஏமாற்றப்பட்ட பின்னணி.. ராமதாஸ் திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குவைத் நாட்டிற்கு தூய்மை பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட 20 தமிழர்கள், அந்நாட்டில் தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "குவைத் நாட்டில் தூய்மைப் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், அவர்கள் பணி செய்த நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு, சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். தாயகம் திரும்ப தங்களுக்கு உதவி செய்யும்படி தூதரகத்தில் முறையீடு செய்தும் அவர்களுக்கு தூதரகம் எந்த உதவியும் செய்யாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

20 Tamils who were cheated by being taken to Kuwait for sanitation work : Ramdoss explain

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 இளைஞர்கள் கடந்த ஓராண்டுக்கு முன் சென்னையில் உள்ள ஆள்தேர்வு நிறுவனத்தின் மூலமாக குவைத் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் தூய்மைப் பணியாளர்களாக பணிக்கு சென்றனர். அதற்காக சென்னையில் உள்ள ஆள்தேர்வு நிறுவனத்திற்கு ரூ.1.05 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ளனர். குவைத் நிறுவனத்தில் அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000 (75 குவைத் தினார்) வீதம் இரு ஆண்டுகளுக்கு வேலை வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓராண்டு பணி முடிந்த நிலையில், வேலைவாய்ப்பை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டுமானால் ரூ.1.25 லட்சம் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று குவைத் நிறுவனம் கட்டாயப்படுத்தியிருக்கிறது.

குவைத்துக்கு வேலைக்கு சென்ற 20 இளைஞர்களும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த ஓராண்டாக பணி செய்து அவர்கள் ஈட்டிய ஊதியத்தைக் கொண்டு, குவைத் செல்வதற்காக வாங்கிய கடனையும், அதற்கான வட்டியையுமே கட்ட முடியாத நிலையில், அவர்களால் குவைத் நிறுவனம் கேட்ட பணத்தைத் தர முடியவில்லை. அதனால், அவர்களை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம், அவர்களின் கடவுச்சீட்டை பறித்து வைத்துக் கொண்டது. அவர்களின் உடமைகள் அனைத்தையும் தூக்கி வீசிய நிறுவன அதிகாரிகள், அவர்கள் தங்குவதற்காக அளிக்கப்பட்டிருந்த இடத்தையும் மூடி விட்டனர். அதனால், 20 இளைஞர்களும் கடந்த ஒரு மாதமாக தங்குவதற்கு இடம் இல்லாமலும், உண்ண உணவு கிடைக்காமலும் குவைத்தில் வாடுகின்றனர். அவர்களிடம் கடவுச்சீட்டும், பயணச்சீட்டுக்கு பணமும் இல்லாததால், சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் குவைத்தில் தவித்து வருகின்றனர்.

குவைத் நிறுவனம் தங்களை ஏமாற்றியது குறித்து குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம், தொழிலாளர் நலத்துறை அலுவலகம், காவல்நிலையம் ஆகியவற்றில் 20 தமிழ் இளைஞர்களும் புகார் செய்துள்ளனர். அவர்களின் புகாரை ஆய்வு செய்த உள்ளூர் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளை வரவழைத்து விசாரித்துள்ளனர். அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட 20 தொழிலாளர்களும் தங்கியிருக்க இடமும், உணவும் அளிக்க வேண்டும்; அவர்களின் கடவுச்சீட்டை ஒப்படைத்து, பயணச்சீட்டு பெற்றுக் கொடுத்து அவர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளனர். ஆனால், காவல்துறையின் ஆணையை குவைத் நிறுவனம் மதிக்காததால், 20 தமிழ் இளைஞர்களின் துயரம் தொடர்கிறது. ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் அவர்கள் தவிக்கின்றனர்.

குவைத் நிறுவனத்தின் துரோகம் மற்றும் மோசடி குறித்து அங்குள்ள இந்திய தூதரகத்திலும் கடந்த ஜூலை 23&ஆம் நாள் அவர்கள் புகார் செய்துள்ளனர். ஆனால், அதன்பின் ஒரு மாதம் ஆகியும் இது வரை எந்த நடவடிக்கையையும் இந்தியத் தூதரகம் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வேலை இல்லை என்பதற்காகத் தான் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு பணிக்கு செல்கின்றனர். மாதம் ரூ.20000 ஊதியம் கிடைக்கும் வேலைக்கு தங்களின் குடும்பத்தினரை பிரிந்து பல்லாயிரம் கி.மீ தொலைவுக்கு அப்பால் பணிக்கு செல்கிறார்கள் என்றால், அவர்களின் பொருளாதார நிலையை புரிந்து கொள்ள முடியும்.

கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் செலவழித்து குவைத்துக்கு சென்ற அவர்கள் ஓராண்டில் ஈட்டிய மொத்த ஊதியமே ரூ.2,40,000 மட்டும் தான். அவர்களிடம் கூடுதலாக ஓராண்டு பணி வழங்க ரூ.1.25 லட்சம் கேட்பது எந்த வகையிலும் நியாயமல்ல. அப்பாவி தமிழ் தொழிலாளர்களிடம் நிகழ்த்தப்படும் இந்த உழைப்புச் சுரண்டலை எந்த நாடும் அனுமதிக்கக் கூடாது.

குவைத் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட 20 தமிழ் இளைஞர்களும் எதிர்காலம் என்னவாகும் என்பதே தெரியாமலும், அடுத்த வேலை உணவுக்கு வழியில்லாமலும் தவிக்கின்றனர். அவர்களின் துயரம் தொடர்கதையாகக் கூடாது. குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக சம்பந்தப்பட்ட குவைத் நிறுவனத்திடமிருந்து தொழிலாளர்களின் கடவுச்சீட்டு, ஊதிய நிலுவை ஆகியவற்றை பெற்றுக் கொடுத்து, 20 தமிழ் இளைஞர்களையும் தாயகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+