ஆஹா.. நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் ராகுல் காந்தி போட்டி? காரணம் இதுதானாமே! பரபர தகவல்!
2019 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி, கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.
சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்பியுமான ராகுல் காந்தி கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்களும் வெளியாகி உள்ளது.
2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து மத்தியில் காங்கிரஸ் கட்சி தனது கூட்டணி ஆட்சியை இழந்தது. அதன்பிறகு 2019 தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி ஜொலிக்கவில்லை. மாறாக பாஜக முந்தைய தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
இதன்மூலம் கடந்த 2014 முதல் தொடர்ந்து நரேந்திர மோடி பிரதமராக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

கன்னியாகுமரியில் துவங்கிய யாத்திரை
அதன்படி ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 3,500 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாரத் ஜோடோ யாத்திரை நடத்தினர். இதற்கு சமூக செயற்பாட்டாளர்கள், பொருளாதார அறிஞர்கள், நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள் என ஏராளமானவர்கள் ஆதரவு அளித்தனர். இது காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும் தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை அகற்ற முடியாது. இதனை அக்கட்சியும் நன்கு உணர்ந்துள்ளது. இதனால் தான் பாஜகவுக்கு எதிரான சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகள் காங்கிரசுடன் கைகோர்க்க வேண்டும் என அக்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

3வது அணி முயற்சி
ஆனால் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், தெலங்கானா முதல்வர் சந்திர சேகரராவின் பாரத் ராஷ்ட்ரிய சமீதி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்நிறுத்தப்படுவார் என்பதால் இந்த 3 கட்சியினரும் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. மாறாக 3வது அணியை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கின்றனர்.

அமேதிக்கு செக் வைக்கும் அகிலேஷ்
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ், பாஜகவில் இருந்து சமமான தூரத்தில் விலகி இருக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் அல்லாத 3வது அணியை உருவாக்குவதில் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உறுதியாக இருப்பது தெரியவந்தது. உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் அமேதி ஆகியவை காங்கிரஸ் கட்சியின் தொகுதிகளாக அறியப்பட்டுள்ளன. இதில் ரேபரேலியில் சோனியா காந்தியும், அமேதியில் ராகுல் காந்தியும் போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த 2 தொகுதிகளிலும் பிற கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருப்பதால் காங்கிரஸ், பாஜக இடையே தான் போட்டி இருக்கும். கடந்த தேர்தலில் சமாஜ்வாதி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தாத நிலையில் ரேபரேலியில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். மாறாக அமேதியில் ராகுல் காந்தி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். மாறாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் 2 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளார். குறிப்பாக அமேதி தொகுதியை விட்டு கொடுக்கப்போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை எதிர்க்க அவர் தயாராகி உள்ளது தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரியில் போட்டி
இந்நிலையில் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என ஒவ்வொரு மாநில தலைவர்களும் குறிப்பிட்ட தொகுதிக்கு அவரை அழைக்கின்றனர். அதன்படி 2024 ம் ஆண்டில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டிய தொகுதிகள் பற்றிய ஆலோசனையும் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கன்னியாகுமரி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த முறை கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியை நிறுத்த தலைவர்கள் விரும்பிய நிலையில் அது நடக்கவில்லை. இந்நிலையில் தான் கன்னியாகுமரியில் ராகுல் காந்தியை போட்டியிட வைக்க வேண்டும் என பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி இன்னும் ராகுல் காந்தி முடிவு செய்யாத அவர் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளில் கன்னியாகுமரியும் ஒன்றாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதன்படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிற தொகுதிகை காட்டிலும் கன்னியாகுமரியில் களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதன் பின்னணியில் முக்கிய 2 விஷயங்கள் உள்ளன.

வெற்றி எளிமை
அதாவது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வசந்த குமார் வெற்றி பெற்ற நிலையில் 2020ல் காலமானார். இதையடுத்து அவரது மகன் விஜய் வசந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் ராகுல் காந்தி போன்ற பெரிய தலைவர்கள் போட்டியிட்டால் மக்களின் ஆதரவு என்பது இன்னும் அதிகமாக காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும். இதனால் ராகுல் காந்தி எளிதாக வெற்றி பெறலாம் என கட்சியின் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணி பிளஸ் பாயிண்ட்
மேலும் தற்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் உள்ளது. திமுகவுடன், காங்கிரஸ் கட்சிக்கு நல்ல உள்ளது உள்ளது. அதோடு திமுக கூட்டணியில் பெரும்பான்மையான கூட்டணி கட்சிகள் உள்ளது எதிர்ப்புகள் ஏதுமின்றி ராகுல் காந்திக்கு நேரடியாக பிளஸ் பாயிண்டாக அமையும். மாறாக உத்தர பிரதேசம் அமேதியில் ராகுல் காந்தி போட்டியிட்டால் பாஜக, சமாஜ்வாதியை தாண்டி அவரது வெற்றி என்பது கேள்விக்குறியாகலாம். இதனால் ராகுல் காந்தி கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வேண்டும் என தலைவர்களே அவரிடம் நேரடியாக கூறி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஒருவேளை கன்னியாகுமரி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டால் அங்கு எம்பியாக உள்ள விஜய் வசந்தின் நிலை என்ன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மற்றொரு காரணம்
மேலும் கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிட்டதன் மூலம் அவர் இடதுசாரிகளை எதிர்ப்பதாக தகவல்கள் பரவுகின்றன. இது தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு பாதகமாக இருக்கிறது. மேலும் சிபிஐஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டவர்களுடன் இருக்கும் நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்த ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வயநாட்டில் இருந்து வெளியேறி கன்னியாகுமரியில் போட்டியிட்டால் திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு நேரடியாக கிடைக்கும். இதன்மூலம் இடதுசாரிகளுக்கான எதிரானவர் என கேரளாவில் உருவான பிம்பத்தை ராகுல் காந்தியால் உடைக்க முடியும். அதோடு கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க வாய்ப்பு ஏற்படும் என காங்கிரஸ் கட்சியினர் நினைக்கின்றனர்.

பெங்களூர் புறநகருக்கும் வாய்ப்பு
இதுதவிர காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள பெங்களூர் புறநகர் தொகுதியிலும் ராகுல் காந்தி களமிறங்கலாம் என கூறப்படுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியின் டிகே சுரேஷ் எம்பியாக உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநில தலைவர் டிகே சிவக்குமாரின் உடன்பிறந்த தம்பியாவார். இவர்கள் 2 பேருக்கும் ராமநகர், பெங்களூர் புறநகர் மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு உள்ளது. இதனால் தான் கடந்த 2019 தேர்தலில் கர்நாடகாவில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தோற்ற நிலையில் பெங்களூர் புறநகர் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் டிகே சுரேஷ் வெற்றி பெற்றார். இதனால் அங்கேயும் ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும் கூட கர்நாடகாவில் பாஜக பலமாக இருப்பதால் பெங்களூர் புறநகர் தொகுதியை காட்டிலும் கன்னியாகுமரியில் ராகுல் காந்தி போட்டியிடுவது தான் சிறந்தது என கட்சியினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

வயநாடு தொகுதியில் யார்?
ஒருவேளை மேற்கூறிய படி ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடாமல் இருந்தால் அங்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான கேசி வேணுகோபால் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு 2024 நாடாளுமன்ற தொகுதியில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக தற்போது ராகுல் காந்தி கன்னியாகுமரி தொகுதியில் களமிறங்க போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.












Click it and Unblock the Notifications