2024 நாடாளுமன்றத் தேர்தல்! திமுக கூட்டணியில் பாமக? பாஜகவை பலவீனப்படுத்த வியூகம்! என்ன பின்னணி?
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில் தமிழகத்தில் பாஜகவை பலவீனப்படுத்தும் வியூகங்களை வகுத்து வருகிறது திமுக.
தற்போதைய அரசியல் சூழலில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறாது என்பதால் குறைந்தபட்சம் பா.ம.க.வையாவது பாஜக கூட்டணியிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறது திமுக தரப்பு.

இதன் மூலம் தேர்தல் களத்தில் பாஜகவை பலவீனப்படுத்த முடியும் என்பது திமுகவின் கணக்காக உள்ளது. இதனிடையே மூன்று முக்கிய அமைச்சர்களான துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு ஆகியோர் பாமக தரப்புடன் மென்மையான போக்கை கடைபிடித்து வருவதும் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
நேற்றுக் கூட ராமதாஸ் 85வது பிறந்தநாளையொட்டி மூன்று அமைச்சர்களும் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறியிருக்கின்றனர். அதேபோல் கடந்த வாரம் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் இல்ல மண விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், ராமதாஸை தனது அருகில் அழைத்து நிற்க வைத்து புகைப்படம் எடுக்க வைத்தார். சம்பிரதாய சந்திப்பாக இல்லாமல் கரங்கள் பற்றி அக்கறையோடு நலம் விசாரித்தார்.
இதனிடையே என்ன தான் திமுக தரப்பிலிருந்து மெல்ல மெல்ல நெருங்கி வந்தாலும் பாமக தரப்பு இன்னும் பிடிகொடுக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் என்.எல்.சி. விவகாரத்தில் தமிழக அரசின் மீது அன்புமணி ராமதாஸுக்கு ஏக வருத்தம் இருப்பதேயாகும்.
அதேபோல் மதுவிலக்கு விவகாரமும் கூறப்படுகிறது. அதனால் திமுக கூட்டணியில் பாமக மீண்டும் இணைவதற்கான சாத்தியக் கூறுகள் தற்போதைய சூழலில் மிகவும் குறைவு என்றாலும் வரும் நாட்களில் கூட்டணிக்காற்று எப்படி வேண்டுமானாலும் வீசலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே அன்புமணி ராமதாஸை பொறுத்தவரை மீண்டும் மற்ற கட்சிகளுக்கு கீழ் கூட்டணி சேராமல் பாமக தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என எண்ணுகிறார்.












Click it and Unblock the Notifications