25% இட ஒதுக்கீட்டில் அட்மிஷன்.. லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி? முதல்வருக்கு மக்கள் நலபேரவை கோரிக்கை
சென்னை: லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கவனத்தில் கொண்டு மைய - மாநில அரசுகள் இணைந்து RTE சேர்க்கைக்கான பிரச்சனைக்கு உடனடியாக விரைந்து தீர்வு காண்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.. இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், அகில இந்திய பேரவை தலைவர் விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2009 (RTE) சேர்க்கைக்கான நடைமுறைகள் தற்பொழுது தொடங்கப்படாததற்கு கவலை தெரிவித்தும் - ஏழை மாணவர்களின் நலன் கருதியும், பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மக்கள் நலப் பேரவை தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.

பணம் உள்ளவருக்கு கல்வி
அந்த கடிதத்தில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் எதிர்வரும் 2025 ஜூன் மாதம் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் 2025 - 26 ஆம் கல்வி ஆண்டிற்கான RTE சேர்க்கைகான நடைமுறைகள் தற்பொழுது வரை தொடங்கப்படாததால் பிள்ளைகளின் கல்வி குறித்து பெற்றோர்களும், மாணவர்களும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தரமான கல்வி என்பது பணம் உள்ளவருக்கு மட்டும் என்கின்ற சூழலை மாற்றும் பொருட்டு பொருளாதார ரீதியாகவும் மற்றும் பின்தங்கிய நிலையில் இருக்கும் பிரிவினர்கள் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) படி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இருக்கைகள் இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் மைய - மாநில அரசுகளின் நிதி (பங்களிப்புடன்) உதவியுடன் மைய அரசு 60% மற்றும் மாநில அரசு 40% நிதி என்கின்ற வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. RTE திட்டத்தின் மூலம் அனைத்து தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை இலவசமாக கல்வியினை பெறலாம் என்பது இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
இத்திட்டத்தின் மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தூய்மை பணியாளர்கள், ஆதரவற்றவர்கள், ஏழை எளிய மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் பின்தங்கிய பிரிவினர்கள் என மேற்கண்ட அனைத்து தரப்பினைச் சார்ந்தவர்களின் பிள்ளைகள் இலவச கல்வி பயின்றிட ஒரு வரப்பிரசாதமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் லட்சக்கணக்கான மாணவர்கள் இக்கல்வித் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
கட்டாய கல்வி - கட்டணம்
இந்நிலையில் தமிழகத்தில் 2025 - 26 ஆம் கல்வி ஆண்டிற்கான கட்டாய கல்வி சட்டத்தின் (RTE) படி இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 3வது வாரம் தொடங்கப்படும் என பத்திரிகைகளின் செய்தி வந்ததின் அடிப்படையில் பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்கள் தற்போது வரை தொடங்கப்படவில்லை என்பதினால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு, பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இன்று வரை தமிழ்நாடு அரசு RTE சேர்க்கை குறித்து எந்த ஒரு அறிவிப்பினையும் வெளியிடாதது கவலையளிக்கின்றது.
மேற்கண்ட பிரச்சனைக்கு முக்கிய காரணமாக தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் RTE கல்வி சட்டத்தின் படி மைய - மாநில அரசுகளுக்கிடையே இத்திட்டத்திற்கான நிதி பங்களிப்பு வழங்குவது சம்பந்தமாக மாணவர்களுக்கான கட்டணத் தொகையில் மைய அரசு தரப்பிலிருந்து 60% நிதியும் மற்றும் மாநில அரசு தரப்பிலிருந்து 40% நிதியும் வழங்கப்படும் என்பது அடிப்படையில் மைய மாநில அரசுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டு தற்பொழுது வரை நடைமுறையில் உள்ளது.
ஆனால் மைய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக அதற்குரிய நிதியினை மாநில அரசுக்கு முறையாக உரிய நேரத்தில் வழங்காமல் தொடர்ந்து தாமதபடுத்தி வருவதினை குறிப்பிட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கை
இத்தகைய மைய மாநில அரசுகளின் அரசியல் சார்ந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் மைய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்தில் மாநில அரசு உடன்படாத காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்பதுதான் நிதர்சனம்.
எனவே RTE சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி மைய - மாநில அரசுக்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், RTE ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் மேற்கண்ட ஆர்வலர்களும் பெற்றோர்களும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மைய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக இலவச கட்டாய கல்வி திட்டத்திற்கு உரிய பங்களிப்பினை வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின்
ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கவனத்தில் கொண்டு மைய - மாநில அரசுகள் இணைந்து RTE சேர்க்கைக்கான பிரச்சனைக்கு உடனடியாக விரைந்து தீர்வு காண்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்" என டாக்டர்.ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் இதுகுறித்து இந்திய ஜனாதிபதி, பிரதமர், மத்திய கல்வி துறை அமைச்சர், கல்வித்துறை செயலாளர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வி துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு கல்வித்துறை முதன்மைச் செயலாளர், அரசு கூடுதல் செயலாளர் மற்றும் உயர்திரு அரசு இணைச் செயலாளர் என மேற்கண்ட அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications