ஆஃபர் 39+ தந்த விஜய்: தமிழக காங்கிரஸை கழற்றி விடுகிறதா திமுக? சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு?
சென்னை: தேர்தல் வரப்போகிறது.. கூட்டணி கட்சிகளும் தயாராகி வருகின்றன.. ஆனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் இழுபறி, அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதன் முடிவு என்ன? ஒருவேளை கூட்டணியில காங்கிரஸ் இடம் பெறாவிட்டால், திமுகவுக்கு பாதிப்பா? சிறுபான்மை ஓட்டுக்கள் யாருக்கு போகும்?
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.. காங்கிரஸ் தரப்பில், மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் மூலம் 39 தொகுதிகள் மற்றும் முக்கிய அரசியல் பங்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

25 தொகுதிகள்
ஆனால், திமுக தரப்பு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளின் அளவையே தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.. புதிய கூட்டணி கட்சிகளுக்கு இடமளிக்க வேண்டிய அவசியம் இருப்பதால், காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குவது சாத்தியமில்லை என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
இந்த சூழலில், காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் சிலர், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முக்கிய பிரதிநிதிகளை ரகசியமாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன..
70 தொகுதிகள்
எதிர்கால கூட்டணி வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும், காங்கிரஸை தங்கள் அணிக்கு ஈர்க்கும் வகையில், சுமார் 70 தொகுதிகள் வரை ஒதுக்குவது மற்றும் முக்கிய அரசியல் பதவிகள் வழங்குவது போன்ற வாய்ப்புகள் குறித்து தவெக தரப்பு முன்வைத்ததாகவும் பேசப்படுகிறது..
இந்த ரகசியப் பேச்சுவார்த்தை விவரம் திமுக-வுக்கு எட்டிய உடனே, காங்கிரஸை அவசரமாகப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.. ஒருவேளை காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகி விஜய்யின் தவெக-வுடன் கைகோர்த்தால், அது திமுக-வுக்குப் பெரும் சவாலாக அமையும்..
சிறுபான்மையினர் வாக்குகள்
கடந்த காலங்களில் சிறுபான்மையினர் வாக்குகள் பெரும்பாலும் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்த நிலையில், தவெக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் அந்த வாக்கு வங்கியில் கணிசமான பிரிவினை ஏற்பட வாய்ப்புள்ளது.. இதை ஈடு செய்ய, திமுக தலித் வாக்குகள் மற்றும் பிற சமூகத்தினரின் ஆதரவை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்..
இதனிடையே, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
நாளை பேச்சுவார்த்தை
அதற்கு முன்னதாக, டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.. தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது புதிய அரசியல் வாய்ப்புகளை ஆராய்வதா என்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் விரைவில் இறுதி முடிவு எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..
அதுமட்டுமல்ல, கடந்த தேர்தலை போலவே 25 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை பதவி வழங்கும் நிலைப்பாடே இந்த முறையும் தொடரக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது..
இந்த கூட்டணி பேச்சுவார்த்தையின் முடிவு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications