மின்சார ரயில்கள் ரத்து! சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் அலைமோதும் பயணிகள்!
சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்டு வரும் 40 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் போதிய ரயில்கள் இல்லாமல் கிண்டி ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் தொடர்ந்து 20 நிமிடங்களாக காத்திருக்கும் நிலை உள்ளது.

சென்னையின் முக்கிய புறநகர் ரயில் சேவைகளில் ஒன்றான கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணி காரணமாக 40 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தப் பணி, பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்று (பிப்ரவரி 20) தொடங்கி, ஏப்ரல் 5-ஆம் தேதி வரை மொத்தம் 45 நாட்களுக்கு இந்த ரயில் சேவை மாற்றங்கள் அமலில் இருக்கும். பொதுவாக, இந்தப் பாதையில் தினசரி 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 2.80 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமாக 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் நின்று செல்லும் புறநகர் ரயில்கள், இந்த நாட்களில் 5 மற்றும் 6-வது நடைமேடைகளுக்கு மாற்றப்பட்டு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரயில் ரத்து காரணமாக வேலைக்குச் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் பாதிக்கப்படுவார்கள். பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், சென்னை புறநகர் பகுதிகளில் கூடுதலாகப் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம், கேளம்பாக்கத்தில் உள்ள எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி, இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி, வண்டலூரை அடுத்த மேலகோட்டையூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் இந்த மின்சார ரயிலை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டில் இருந்து பீச் வரை குறைந்த கட்டணத்தில் இவர்கள் பயணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த மின்சார ரயில்கள் ரத்தானதால் குறைந்த அளவிலான சில வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கிண்டி ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் அங்கும் 20 நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்தும் ரயில் வராததால் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications