இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில் வீச்சு... 4 பேரை கைது செய்த சென்னை காவல்துறை
சென்னை: தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை தி. நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை வீசியுள்ளனர். அந்த சமயம் கட்சி அலுவலகத்திற்குள் யாரும் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

மாநில தலைமை அலுவலகம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து கட்சி நிர்வாகிகள் மாம்பழம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி, சம்பவம் நடந்த சமயத்தில் யாரும் இல்லாத காரணத்தால் எந்த பாதிப்பும் இல்லை. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணிநேரமும் காவல்துறை பாதுகாப்பு அளித்து, இங்கே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தலைமை அலுவலகம் சென்னை மாநகரில், 43 செவாலியே சிவாஜி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை 600 017 என்ற முகவரியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.
1973 ஆண்டு விமான விபத்தில் இறந்து போன கட்சி தலைவர் கே.பாலதண்டாயுதம் நினைவாக "பாலன் இல்லம்" என்ற பெயரில் அமைந்த கட்சி அலுவலகம் எட்டு மாடிக் கட்டிடமாக புதுப்பித்து, வலுவான சுற்றுச் சுவர் கொண்ட வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தாமஸ் சாலையில் நேற்று இரவு 7.45 மணி முதல் 9.30 மணி வரை சமூக விரோத விஷமிகள் கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கட்சி அலுவலக பாதுகாவலர் உள்ளிட்ட பணியாளர்கள் தாக்குதல் நடத்தும் நபர்களைக் கண்டறியும் முயற்சிக்கும் போது, எங்கோ பதுங்கி விடுகின்றனர். அக்கம், பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்தால் அவர்கள் எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர்.
இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் கொடுத்து, விசாரணை நடந்து வந்த நிலையில், காவல்துறையினர் இருந்த இடம் நோக்கி கற்களும், பாட்டிலும் வீசப்பட்டன. இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் ஐந்து நபர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளின் சட்ட விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கும் வகையில் உறுதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதுடன், தாக்குதலின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தி.நகரை சேர்ந்த அலெக்ஸ், பாரதி, அருண்குமார், பார்த்திபன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பாட்டிலை வீசி தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications