Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜாக்களுக்கு மத்தியில்.. சக்கரவர்த்தியாக மகுடம் சூடிய ஏ.ஆர்.ரகுமான்! 90ஸ் நாயகன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசை புயல் ஏஆர் ரஹ்மானின் 57வது பிறந்த நாள் இன்று (HBD AR Rahman). 80ஸ் கிட்ஸ்களுக்கு (70களில் பிறந்தவர்கள்) இளையராஜா இசை எப்படி தங்கள் வாலிபத்தை வளப்படுத்தியதோ அப்படிதான், 90ஸ் கிட்ஸ்களுக்கு (80களில் பிறந்தவர்கள்) ஏ.ஆர்.ரஹ்மான். 90ஸ் கிட்ஸ்களின் நட்பு, காதல், உற்சாகம் அல்லது சோகம் என ஏதோ ஒன்றில் ரஹ்மான் பாடல்கள் இடம் பிடித்திருக்கும்.

இளையராஜா இசையிலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையை கேட்க ஆரம்பித்தபோது அனைவருக்கும் அதில் ஒரு வித்தியாசம் இருப்பதை உணர முடிந்திருக்கும். அது அதுவரை தமிழ் திரையுலகம்.. ஏன்.. இந்திய திரையுலகமே கேட்டிராத இசை அனுபவமாக இருந்திருக்கும். "ரோஜா" திரைப்பட பாடலை முதலில் கேட்டபோது என்னாச்சு நம்ம டேப்ரெக்கார்டருக்கு, இவ்ளோ கிறிஸ்டல் கிளியரா ஒரு சத்தம் வருதே என்று திருப்பி திருப்பி பார்த்தவர்கள் ஏராளம்.

A.R. Rahman, The Maestro Who Painted the 90s with Music of Innovation

ஜென்டில்மேன் வந்தபோது தேனாக காதில் பாய்ந்தன மெட்டுக்கள். காதலன் வந்தபோது கால்கள் தானாக ஆட்டம் போட்டன. பம்பாய் படம் வந்தபோது, நமது நெஞ்சத்தை பாடல்களால் பதம் பார்த்ததன. பாசத்தை பாய் போல மடித்து, பத்திரம் போட்டு கொடுத்தோம் இந்த இசை மாயக்காரனுக்கு. உசிலம்பட்டி பெண்குட்டி, ஒட்டகத்தை கட்டிக்கோ.. ஊர்வசி, ஊர்வசி, என்னவளே அடி என்னவளே, அந்த அரபிக் கடலோரம்.. இப்படி வரிசையாக வாரிக் கொடுத்து, இவர் இசை புயல் அல்ல, இசை பேரண்டம் என வியக்க வைத்த ஜாலக்காரன்தான் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஏஆர் ரஹ்மானின் 57வது பிறந்த நாளில், டீ என்ற புனைப்பெயரில் எக்ஸ் தளத்தில், முரளி என்பவர் எழுதிய ஒரு கட்டுரையின் ஒரு பகுதி இதோ உங்களுக்காக.. அப்படியே கொஞ்சம் காலத்தை பின்னோக்கி நகர்த்தி படித்து வாருங்கள்..

A.R. Rahman, The Maestro Who Painted the 90s with Music of Innovation

இரண்டாம் ஆண்டில் கேரளா அல்லது கர்நாடகாவிற்கு ஒரு ஒரு வார டூர் நான்காம் ஆண்டில் ஒரு 15 நாள் ஆல் இந்தியா டூர் என்பது 90களில் பொறியியல் கல்லூரிகளில் எழுதப்படாத விதியாக இருந்த காலம். இரண்டாம் ஆண்டில் நுழைந்த உடனேயே முதலில் சிலபஸ் பார்க்கிறார்களோ இல்லையோ டூர் புரோகிராம் பிளான் பண்ண ஆரம்பித்து விடுவார்கள். நாங்கள் கேரளா செல்வது என்று முடிவானது. பேருந்தில் கேட்பதற்காக பாடல் கேசட் ரெடி செய்யும் பொறுப்பு என்னிடம் வந்தது. காலையில பிளசண்டா இருக்கணும், மதியம் குத்து சாயங்காலம் சோக மெலடி இந்த டைப்புல நாலஞ்சு கேசட் ரெடி பண்ணு என்று டூர் கோ ஆர்டினேட்டர்கள் கட்டளை பிறப்பித்திருந்தார்கள். அதன்படி செலக்ட் செய்து பதியக் கொடுத்திருந்த கேசட்டுகளை வாங்கப் போன போது, மணிரத்னத்தோட ரோஜா பாட்டு கேசட் வந்திருச்சு. நல்லா இருக்கு, வாங்கிக்குங்க என்றார் கடைக்காரர்.

இந்தியன் ஆயில் கார்ப்பொரேசன் அதிகாரி துரைச்சாமி கடத்தப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட படம். தளபதியின் கலெக்டர் நாயகனாக நடிக்கிறார், புது இசை அமைப்பாளர் அறிமுகமாகிறார் என்ற அளவில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த நேரம். மணிரத்னமுடைய படம் என்பதால் நம்பி வாங்கினேன். வேற கேசட்டே இல்லையாடா என்ற நண்பனின் வேண்டுகோளுக்காக ஒலிக்க விடப்பட்டது ரோஜா படப் பாடல். வாழ்வின் இனிமையான தருணங்களில் ஒன்றாகிப் போன நிகழ்வு அது. அந்த கிளைமேட்டிற்கும், நட்பு அரட்டைக்கும் பின்னணியாக ரோஜா பாடல்கள். நல்லா இருக்கில்ல என்று பேசிக் கொண்டோம். அதன்பின் சில நாட்களில் ஆகஸ்ட் 15 அன்று படம் ரிலீஸானது. ஏ சைடு பூராம் ரோஜா பாட்டு பதிஞ்சு வச்சிருக்கோம். பி சைடுல பெரும்பாலும் சூரியன், அண்ணாமலை, தெய்வவாக்கு இல்லையின்னா செம்பருத்தி போட்டு கொடுத்திடுவோம் என்பார் கேசட் கடைக்காரர்.

கல்லூரி விழாக்கள், விசேஷ வீடுகள் என ரோஜா பாடல்கள் மெல்ல ஊடுருவி ரஹ்மானின் பெயர் பரிச்சயமாகத் தொடங்கியது. ஒரு மனிதனின் வெயில் தாங்கும் திறமையை சோதிக்கும் பரிசோதனை களங்களில் ஒன்றான விருதுநகர் அருகே ஒரு கிராமத்தில் உறவினர் வீட்டு விசேஷம். அப்போது, வேன் ட்ரைவர் ஒரு பாடல் கேசட்டை ஒலிக்க விட்டார். அத்தனை சிரமங்களும் குறைந்தாற்போல ஒரு உணர்வு. வேனில் இருந்த பலரும் அதை அனுபவித்தனர். அதுதான் ஜென்டில்மேன். அதன்பின் ஒரு மூன்று மாதங்கள் எல்லாப் பக்கமும் ஜென்டில்மேன் பாடல்கள் தான். அந்தக்காலம் சிடி பிளேயர்களின் வருகைக்கு சற்றே சற்று முன்னாலான காலம். பிலிப்ஸ் நிறுவனம் டைனமிக் பேஸ் பூஸ்ட் அது இது என பல மாடல்களை இறக்கியிருந்த நேரம். அந்த டேப் ரிக்காடர்களின் டெமோவுக்கு எல்லாம் ஜென்டில்மேன் ஒரிஜினல் காசட்டைத்தான் கடைக்காரர்கள் உபயோகப் படுத்துவார்கள்.

உசிலம்பட்டி பெண்குட்டியும், ஒட்டகத்தை கட்டிக்கோ பாடலும் ஒலிக்காத விழாக்கள் எதுவுமேயில்லை. அதே ஆண்டு தீபாவளிக்கு மணிரத்னத்தின் திருடா திருடாவும், பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலேவும். ரோஜா, ஜெண்டில்மேன் வரிசையில் திருடா திருடா எதிர்பார்த்த மெகா ஹிட். ஆனால் கிழக்கு சீமையிலே? டெண்டுல்கர் அறிமுகமாகி பலரையும் விளாசி பெயர் பெற்ற நேரத்தில் அவரை இன்னும் வெகுவாக நம்பலாம் என்ற மாற்றத்தை ஏற்படுத்தியது 92ல் பெர்த் டெஸ்டில் அவர் அடித்த சதம். எகிறும் பிட்ச்சில் ஆஸ்திரேலிய வேகங்களை அவர் ஆடிய விதத்தைக் கண்டபின்னர் அவரை சந்தேகத்துக்கு இடமின்றி அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதுபோலத்தான் கிழக்குச்சீமையிலே ரஹ்மானுக்கு. மானுத்து மந்தையிலேதான் இன்னும் மதுரையில் காதுகுத்துக்கு தாய் மாமன் சீர் பாடல். இது மாற வெகு காலமாகும். தென்கிழக்கு சீமையிலேவும், எதுக்கு பொண்டாட்டியும் இவன் இருப்பான்யா இருப்பான் என எல்லோர் மனதிலும் ஓர் எண்ணத்தை ஏற்படுத்தியது.

அடுத்த ஆண்டில் டூயட், கருத்தம்மா மற்றும் காதலன். ரெக்கார்ட் எழுதணும்டா அந்த டூயட் கேசட்டைக் குடுடா, அலுப்பில்லாம எழுதலாம் என்று சகஜமாக ஹாஸ்டல் அறையில் பேச்சு கேட்கும். கருத்தம்மா அந்த அளவுக்கு இளைஞர்களை வசீகரிக்கவில்லையென்றாலும் போறாளே பொன்னுத்தாயியும், அடுத்து ஒரு ஜென்மம் வந்து ஆம்பிளையா நீ பிறந்தா பூமியிலே இடமிருக்கும் போய்வாடி அன்னக்கிளியேவும் உலுக்கத்தான் செய்தது. ஒரு அலை போல அப்போதைய கல்லூரி,பள்ளி மாணவர்களை கிறங்கடித்தது காதலன் தான். இரண்டாம் மாடி கடைக்கோடி ரூமில் இருந்து கிரவுண்ட் புளோர் மெஸ்ஸுக்கு வந்து சேர்வதற்குள் காதலன் படத்தின் எல்லாப் பாடல்களும் காதில் விழுந்துவிடும். என்னவளேவும் முக்காப்புலாவும் கேட்டிராத காது கேட்காத காது மட்டும்தான்.

எந்த கல்லூரி கல்சுரலுக்கு போனாலும் சோலோவுக்கு என்னவளே பாடுவார்கள், வெஸ்டன் டான்ஸுக்கு முக்காப்புலா, போக் டான்ஸுக்கு கோழிக்குஞ்சு தேடிவந்த கோபாலா. டேக் இட் ஈஸி ஊர்வசி எல்லாம் ஆத்திச்சூடி போல அனைவருக்கும் மனப்பாடம். ஊசி மூலம் உடலில் பச்சை குத்துவது போல் காது மூலம் மனதில் பாட்டு குத்தும் மாயக்காரன் நீ சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் உன் இசையோ செவிப் பழக்கம் என்று திடீர்க்கவிஞர்கள் உருவாகும் அளவுக்கு அந்த ஆண்டு முழுவதும் ரஹ்மானின் இசை கொடிகட்டிப் பறந்தது. 95ல் பம்பாய்.

பாஸ்கட் பால் விளையாட்டில் அணிகளுக்கு இடையேயான வித்தியாசம் ஐந்து பத்து பாயிண்ட்களுக்குள் இருந்தால் அது நிலையான முண்ணனி கிடையாது. ஒரு தம் பிடித்தால் எளிதில் அதை எட்டிப்பிடித்து விடலாம். இருபத்தைந்து, முப்பது பாயிண்ட் முண்ணனி என்றால் துரத்திப் பிடிப்பது கடினம். இதை துண்டாகப் போய்விடுவது என்று சொல்வார்கள். திரைக்கலைஞர்களின் புகழும் அப்படித்தான். மக்களின் ரசனைக்கு கொஞ்சம் மேலே இருப்பவர்கள் எல்லாம் கால வெள்ளத்தில் துரத்தி பிடிக்கப்பட்டு அமிழ்ந்து விடுவார்கள். தொடர்ச்சியாக சிறப்புகளை தருபவர்கள் தமிழ் சமுதாயத்தால் மறக்க முடியாதவர்கள் ஆவார்கள். ரஹ்மான் பம்பாய் பாடல்களின் வெற்றிக்கு பின்னால் துரத்தி பிடிக்க முடியாத அளவுக்கு சென்று தமிழர்களால் மறக்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டார். இவ்வாறு எழுதியுள்ளார் முரளி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+