விஜய் மக்கள் பிரச்சனையில் தலையிடுவது நல்லது.. திமுகவுடன் கூட்டணி தொடருமா? சிபிஎம் பெ.சண்முகம் பதில்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் மக்கள் பிரச்சனைகளில் தலையிடுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். பரந்தூரில் விமான நிலையம் அமைவதால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கூறிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை ஏப்ரல் மாதம் நடக்கும் மாநாட்டில் முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து போராடி வந்த மக்களை சந்தித்தார். நடிகர் விஜய்-ன் முதல் கள அரசியல் சந்திப்பாக இது அமைந்தது. இந்த சந்திப்பின் போது விஜய் பேசுகையில், டங்ஸ்டன் திட்டத்திற்கு எடுத்த முடிவினை தான் தமிழக அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கும் எடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு என்று திமுகவை விமர்சித்த விஜய், நம்பும்படி நாடகமாடுவதில் வல்லவர்கள் என்றும் கடுமையாக தாக்கினார். அதேபோல் சட்டத்திற்கு உட்பட்டு பரந்தூர் மக்களுடன் எப்போது நானும், தவெகவும் இருப்போம் என்றும் உறுதி அளித்தார்.
விஜய்-ன் பேச்சு தமிழக அரசியல் தலைவர்களிடையே வரவேற்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெறும் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்புவதோடு மட்டுமல்லாமல், மத்திய பாஜக அரசுக்கு போதுமான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, எப்போதும் சிபிஎம் கட்சியை பொறுத்தவரை அகில இந்திய மாநாட்டில் தான் அடுத்த 3 ஆண்டுகளுக்கு எத்தகைய அரசியல் அணுகுமுறையை மேற்கொள்வது என்பது தீர்மானிக்கப்படும். கடந்த மாநாட்டில் எடுத்த முடிவின் படி தான் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் செயல்பட்டோம்.
அதனால் ஏப்ரல் 6ஆம் தேதி அரசியல் அணுகுமுறையை என்ன என்பதை தீர்மானித்து வெளிப்படுத்துவோம். திமுகவுடன் அனைத்து விஷயங்களிலும் நாங்கள் ஒத்துப் போவதில்லை. சரியான விஷயங்களில் மட்டுமே ஆளுங்கட்சியுடன் ஒத்து போயுள்ளோம். அதேபோல் திமுக மீது விமர்சனங்களும் உள்ளது. அதனால் கூட்டணி நிலைப்பாடும் மாநாட்டில் எடுக்கப்படும் என்று கூறினார்.
பின்னர் விஜய் பற்றிய கேள்விக்கு, நடிகர் விஜய் மக்கள் பிரச்சனைகளில் தலையிடுவது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் நீர் நிலைகள், நஞ்சை நிலங்கள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை காலி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 13 ஏரிகளை விமான நிலையம் அமைப்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
அதனால் மாற்று இடத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதை தான் நாங்கள் கூறி வருகிறோம். புதிய விமான நிலையம் சென்னைக்கு அருகில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதனை பரந்தூரில் அமைக்க வேண்டும் என்பதை தான் நாங்கள் ஏற்கவில்லை. மாற்று இடத்தை தமிழக அரசு தான் சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications