அண்ணன் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்... பெங்களூரு புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த்..!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பெங்களூருவில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ரஜினி தனது பிறந்தநாளன்று சென்னையில் இருப்பார் என எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலும், வரும் 15-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பிலும் ரஜினி கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.

அரசியல் கட்சி
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் இந்தாண்டு அவரது பிறந்தநாளை தமிழகம் தழுவிய அளவில் தடபுடலாக கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் பிறந்தநாளன்று ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றத்தினரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பெங்களூருவுக்கு பறந்திருக்கிறார்.

படப்பிடிப்பு
டிசம்பர் 12-ம் தேதி தனது பிறந்தநாளை அண்ணன் வீட்டில் கொண்டாடிவிட்டு அங்கிருந்தவாறே ஹைதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்புக்கும் செல்வார் எனத் தெரிகிறது. ஜனவரி மாதம் முதல் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டவிருப்பதால் இம்மாத இறுதிக்குள் தாம் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகள் அனைத்தையும் முடித்துக் கொடுக்க உள்ளார் ரஜினி.

ஏமாற்றம்
ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை இந்தாண்டு தங்கள் தலைவரின் பிறந்தநாள் சற்று ஸ்பெஷல் தான். காரணம் முதல்முறையாக அரசியல் கட்சி தொடங்குவது குறித்து வெளிப்படையாக அவர் பேசியிருப்பதால், ரசிகர் மன்றத்தினர் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால் இந்த சூழலில் அவர் சென்னையில் இல்லாமல் போனது அவர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது என்றே சொல்லலாம்.

சிரமம்
ரஜினிகாந்த் பெங்களூரு புறப்பட்டு சென்றதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது, அதாவது ஆர்வமிகுதியில் தனது ரசிகர்கள் டிசம்பர் 12-ல் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் திரண்டால் அதனால் அங்கு குடியிருப்பவர்களுக்கு சிரமம் ஏற்படும் எனக் கருதியும், கொரோனாகாலத்தை கருத்தில் கொண்டும் அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications