எந்த குறியீடும் இல்லை.. சைக்கிளில் வராமல் காரில் வந்து வாக்களித்த விஜய்! குலுங்கிய நீலாங்கரை
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாக்களித்தார். கடந்த முறை சைக்கிளில் வந்த அவர், இந்த முறை காரில் வந்து வாக்களித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே, நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரசாரங்கள் நிறைவடைந்தன. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகம் + புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் நீலாங்கரையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் தலைவருமான விஜய் தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார்.
கடந்த முறை அவர் சைக்கிளில் வந்தபோது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவே சைக்கிளில் வந்தார் என்று ஒரு விவாதம் கிளம்பியது. இந்த விவாதங்கள் விமர்சனங்களாக மாறி பாஜக தலைமையிலான மத்திய அரசை நேரடியாக தாக்கியது. இந்நிலையில், இந்தமுறை எந்த அரசியல் குறியீடும் இல்லாமல் சாதாரணமாக காரில் வந்து வாக்களித்துள்ளார். அதேபோல அவர் அரசியல் தலைவராக வாக்களிக்கும் முதல் தேர்தல் இது என்பதால் அவரது த.வெ.க தொண்டர்கள் நீலாங்கரை வாக்குச்சாவடியில் அதிக அளவில் குவிந்தனர்.

முன்னதாக விஜய் கையெழுத்திட்டு த.வெ.க அறிக்கை ஒன்று சோஷியல் மீடியாக்களில் வலம் வந்தது. அதில்,
"எல்லோருக்கும் வணக்கம், தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. பெரும் ஊழல்களை நடத்திக் கொண்டே நம் மக்களை சாதி, மதமொழி, இன அடிப்படையில் பிளவுபடுத்த துடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். அவர்களை எதிர்த்து இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கக்கூடிய ஒவ்வொரு வாக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்த வாக்குகள்தான் இந்திய நாட்டின் ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை, அரசியல் சட்டத்தை, பன்முகத்தன்மையை தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது. அந்த வாக்குகள் தான் உழவர்கள், மீனவர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களின் துயரத்தை துடைக்கப் போகிறது.

இந்தியா அரசியலமைப்புச் சட்டம் நமக்கு தந்துள்ள சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, சுயமரியாதை ஆகியவற்றை காக்க யார் முன்களத்தில் நிற்கிறார்கள் என சிந்தியுங்கள். உங்களின் வாக்கு தமிழ்நாட்டையும் - இந்தியாவையும் காக்கட்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிக்கை விஜய்யின் அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியா பக்கத்திலிருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications