“அவர் என் வக்கீலே இல்லை”.. வழக்கறிஞருக்கு நடிகை கஸ்தூரி எழுதிய கடிதம்.. பரபரப்பு குற்றச்சாட்டு!
சென்னை: "வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் எனது வழக்கறிஞர் எனக் கூறி பேட்டி அளித்து வருகிறார், ஆனால் அவர் என் வழக்கறிஞரே இல்லை" என நடிகை கஸ்தூரி தனது வழக்கறிஞர் கார்த்திக் ராஜாவுக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை கஸ்தூரி கடந்த நவம்பர் 3 ஆம் தேதி சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்தும், தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தெலுங்கு அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர்.

புகார்களின் பேரில் போலீசார் கஸ்தூரி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கஸ்தூரியை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுக்கச் சென்றபோது அவர் வீட்டில் இல்லாதது தெரியவந்தது.
தொடர்ந்து கஸ்தூரி ஹைதராபாத்தில் தலைமறைவானதாக கூறப்பட்டது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து நடிகை கஸ்தூரியை தேடி வந்தனர். கடந்த 17ஆம் தேதி ஹைதராபாத்தில் வைத்து கஸ்தூரியை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, நவம்பர் 18ஆம் தேதி எழும்பூர் போலீசார் சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மகளிர் சிறையில் அடைத்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. எனினும் நடிகை கஸ்தூரிக்கு பிணைப் பத்திரம் கொடுப்பதில் தாமதமானதால் நேற்று மாலை தான் சிறையில் இருந்து நடிகை கஸ்தூரி வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த நடிகை கஸ்தூரியை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். "மக்கள் தலைவி கஸ்தூரி வாழ்க!" என்று முழக்கமிட்டு சால்வை அணிவித்து அவரை வரவேற்றனர்.
புழல் சிறையில் இருந்து வெளியே வந்த கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கும், ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. சிறு குரலாக இருந்த என்னை, சீரும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி. சமூக வலைத்தளங்களில் என்னை ஆதரித்து குரல் கொடுத்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி. என் மீது அன்பு செலுத்தி உறுதியாக ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி. சிறு குன்றாக சிறைக்குள் சென்ற நான் தற்போது மலையாக வெளியே வந்துள்ளேன். குன்றாக இருந்த என்னை மலையாக மாற்றியவர்களுக்கு நன்றி" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்பாக நடிகை கஸ்தூரி சிறையில் இருந்து தனது வழக்கறிஞர் கார்த்திக் ராஜாவுக்கு எழுதிய கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது வழக்கறிஞர் என பிரபாகரன் என்பவர் கூறி வருவது பொய் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் நீதிமன்றத்திலும் பொது இடங்களிலும் பொய்யாகவும் தவறாகவும் என்னால் முன்னிறுத்தப்பட்டதாக கூறி வருகிறார். அது முற்றிலும் பொய்யான தகவல். எனது வழக்கறிஞர் என்கிற முறையில் நான் நியமனம் செய்தது கார்த்திக் ராஜா என்பவரை மட்டும் தான். எனவே பிரபாகரன் நான் நியமிக்கப்பட்டதாக கூறி வருவதை தடுத்து நிறுத்து வேண்டும். இவ்வாறு பொய்யான தகவல்களை பரப்பி வரும் வழக்கறிஞர் பிரபாகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது வழக்கறிஞர் கார்த்திக் ராஜாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வழக்கறிஞர் பிரபாகரன் தனது வழக்கறிஞரே இல்லை எனக் கூறி நடிகை கஸ்தூரி கடிதம் எழுதிய சம்பவம் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை கஸ்தூரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர் பிரபாகரன், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீர் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராக ஆஜரானவர். இவர் நடிகை கஸ்தூரிக்கு நான் தான் வழக்கறிஞர் எனக் கூறி இரண்டு முறை செய்தியாளர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications