மீண்டும் அதிமுக மா.செக்கள் கூட்டத்தைக் கூட்டும் எடப்பாடி பழனிசாமி.. என்ன மேட்டர்?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் நவம்பர் 21ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்து, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு வருகின்றன. அதிமுகவிலும், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வரும் நவம்பர் 21ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளின் களப்பணி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் வரும் 21.1.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள், அதிமுக செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூடத்தில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது தான், பாஜக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அதிரடியாக எடுத்தது அதிமுக. அதன் பிறகு, அதிமுகவினர், பாஜக பற்றியும் அண்ணாமலை குறித்தும் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் மா.செக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications