உரிக்காமலே கண்ணீர் வருதே.. தக்காளியை அப்படியே ஓவர் டேக் செய்த சின்ன வெங்காயம்.. இன்றைய ரேட் என்ன?
சென்னை: தக்காளி விலையை தொடர்ந்து பிற காய்கறிகளின் விலையும் கிடு கிடுவென உயர்ந்து இருப்பது மக்களை கதி கலங்க வைத்துள்ளது. தற்போது சின்ன வெங்காயத்தின் விலையும் ரூ 200 ரூபாயை தாண்டி இல்லத்தரசிகளை கண்ணீர் விட வைத்துள்ளது.
காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை நாடு முழுவதும் உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை ரூ.100 ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். கிச்சனில் இருக்கும் அத்தியாவசிய உணவு பொருட்களில் கண்டிப்பாக இடம் பிடிக்கும் தக்காளியின் விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

தக்காளி விலையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசும் எடுத்துள்ளது. அதன் ஒரு படியாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. எனினும் குறைந்த அளவே விற்பனை செய்யப்படுவதால் மக்கள் வெளிச்சந்தைகளை தான் நாட வேண்டியுள்ளது. அதிக ரேட் காரணமாக கிலோ கணக்கில் வாங்கிய மக்கள் தற்போது அரை கிலோ, கால் கிலோ என வாங்க ஆரம்பித்து விட்டனர்.
ஒரேயடியாக உயர்ந்து கொண்டு இருந்த தக்காளி விலை கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. காய்கறிகளின் வரத்து குறைந்து இருப்பதால் தக்காளி மட்டும் இன்றி சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்து உள்ளது. சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயத்தை வாங்குவதற்காக விலை கேட்ட மக்களுக்கும் பெரும் அதிர்ச்சி தான் கிடைத்தது.
காய்கறிகளின் விலையை கேட்டு அவர்கள் திகைத்துப்போய் உள்ளனர். சின்ன வெங்காயம் ஒரு கிலோ 170 முதல் 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது விலையைக் கேட்டாலே கண்ணீர் வருதே என மக்கள் புலம்பிக் கொண்டே செல்வதை காண முடிந்தது.
கடைகளில் விலையை கேட்காமல் சின்ன வெங்காயத்தை எடுத்தவர்கள் கூட விலையை கேட்டதும் ஒரு நிமிடம் ஷாக் ஆகி அப்படியே போடுவதையும் காண முடிந்தது. பீன்ஸ் ஒரு கிலோ ரூ.80 முதல் 100 ரூபாயாகவும், சுரைக்காய் ஒரு கிலோ ரூ.30 முதல் 40 ரூபாயாகவும், பாகற்காய் ஒரு கிலோ 45- 50 ரூபாயாகவும், வெண்டக்காய் ரூ. 45 ஆகவும் விறபனையாகிறது. முள்ளங்கி கிலோ 40 க்கு விற்பனையானது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.15-20 க்கு விற்பனையாகிறது.
தக்காளி ஒரு கிலோ ரூ. 110க்கும், சில்லறை கடைகளில் 120 ஆகவும் விற்பனையானது. ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 45 இல் இருந்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலி பிளவர் ஒரு கிலோ ரூ.30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. முட்டைகோஸ் மிகவும் மலிந்து காணப்பட்டது. ஒரு கிலோ ரூ.15 முதல் 16 ரூபாய்க்கு விற்பனையானது.
தக்காளி விலை உயர்வால் எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்கப்படும் என்று அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள 85 ரேசன் கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தமிழக அரசு இந்த திட்டத்தை விரிவுபடுத்திய நிலையில் மாநிலம் முழுவதும் 300 ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications